பழநி: சீன நாட்டு தொல்லியல் ஆய்வாளர்களால் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியை சேர்ந்த சித்தர் ஒருவரின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பழநி அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி நேற்று அளித்த பேட்டி:சீனர்களால் கண்டறியப்பட்ட கல்வெட்டின் மேல் பகுதியில் தமிழிலும், கீழ்ப்பகுதியில் சீன மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இது கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்தது. கல்வெட்டில் 3 வரி பாடல் வடிவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பாடலின் பிறப்பிடம் பழநி என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு தென்கிழக்கு சீனாவின் குவான்ஸோ எனும் ஊரில் கிடைத்துள்ளது. இந்த ஊர், பண்டைய சீனாவின் ஒரு பன்னாட்டு துறைமுக பட்டினம். இதே இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், சீன மொழிகளில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்தது. தமிழகத்தை சேர்ந்த ஒரு சித்தர் அந்த கல்வெட்டை பொறித்துள்ளார்.சீனாவை அடிமைப்படுத்திய மங்கோலிய பேரரசன் குப்ளாய்கான் முதுமை, நோயின் காரணமாக உடல்நலம் குன்றி இருந்தார். இவரது ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த சம்பந்தப்பெருமாள் எனும் சித்தர், குப்ளாய்கான் நலம்பெற வேண்டி அங்கு ஒரு சிவன் கோயிலை எழுப்பி, அதற்கு மன்னரின் பெயரிலேயே ‘திருக்கானீசுரம்’ என்று பெயரிட்டுள்ளார். இச்செய்தி அங்குள்ள தமிழ், சீன மொழிகளில் கிபி 1281ம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டையும் சித்தர் சம்பந்தப்பெருமாளே அமைத்திருக்கலாம் என்று உறுதியாக நம்பலாம்.
தமிழ் கல்வெட்டிற்கு கீழே பொறிக்கப்பட்டுள்ள சீன மொழி கல்வெட்டை பரிசோதித்த சீன தொல்லியாளர்கள், துறவி ஒருவர் இக்கோயிலை கட்டி உள்ளார் என்று எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். சீனாவை குப்ளாய்கான் ஆண்டபோது, தமிழகத்தில் குலசேகர பாண்டியனின் ஆட்சி இருந்தது. சீன அரசுக்கும், பாண்டிய அரசுக்கும் மிக நல்ல நட்பும் நிலவி இருந்தது. பாண்டிய நாட்டில், அதுவும் குறிப்பாக பழநி பகுதியை சேர்ந்த சித்தர் சம்பந்தபெருமாள் சீனா சென்று, அங்கு சிவன் கோயிலை, அந்த நாட்டின் அரசன் பெயரில் கட்டி, தமிழில் கல்வெட்டு கொடுத்துள்ளார் என்பது பெருமைக்குரியது. ஏற்கனவே, பழநியை சேர்ந்த போகர் எனும் சித்தரும் சீனா சென்று ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தியதாக குறிப்புகள் பல உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
