மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து பீகார், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மூளைக்காய்ச்சல் பலி நிலவரம், மருத்துவ வசதிகள், தடுப்பு நடவடிக்கை குறித்து பீகார், உ.பி மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரில் 20 மாவட்டங்களில் மூளைக் காய்ச்சல் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 600 குழந்தைகள், சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 149 பேர் பலியாகினர். முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 430 சிறுவர்கள் மூளைகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 109 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியாயினர்.

இதுகுறித்து வக்கீல் மனோகர் பிரதாப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில்,  ‘‘மூளை காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது வருத்தம் அளிக்கிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கு பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் கவனக்குறைவு மற்றும் செயலற்ற தன்மையே காரணம். ஒவ்வொரு ஆண்டும் பரவும் மூளைக் காய்ச்சலை தடுக்க மத்திய மாநில அரசுகள் எதுவும் செய்வதில்லை.  பீகாரில் டாக்டர்கள், மருந்துகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், இதர மருத்துவ கருவிகள் குறைவாக உள்ளன என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவ வசதி குறைவு காரணமாகவே குழந்தைகள் இறக்கின்றனர். இந்நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.காவை ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூளைக்காய்ச்சல் நிலவரம், எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீகார், உ.பி மற்றும் மத்திய அரசு ஆகியவை ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 10 நாட்களுக்குப்பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Tags : Supreme Court ,Bihar ,Central Government , Brain Fever, Bihar, Central Govt. Supreme Court
× RELATED தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக...