அங்கீகாரமற்ற மனைகளை முறைப்படுத்த மீண்டும் ஆன்லைன் முறை கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத லே-அவுட்களை முறைப்படுத்துவதற்காக, மாநில நகர்ப்புற மற்றும் ஊரமைப்பு அமலாக்கத் துறை இயக்குநர் 2017ல்  ஒரு அரசாணை வெளியிட்டார். இதில், அங்கீகாரமில்லாத மனையிடங்களை முறைப்படுத்த www.tnlayoutreg.in என்ற வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.  விண்ணப்பித்த பிறகு அதற்கான அத்தாட்சி சான்று வழங்கப்படும். பின்னர், சொத்து ஆவணங்களை நேரடியாகவோ தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிலப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதி அல்ல என்பதை உறுதி செய்து, தொழில்நுட்ப பிரிவு அனுமதிக்காக சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

இதன்படி, தமிழகம் முழுவதும் 35 சதவீத அங்கீகாரமில்லாத பிளாட்கள், லே-அவுட்கள் வரைமுறை செய்யப்பட்டது. இன்னும் 65 சதவீதம் வரைமுறை செய்யப்படவில்லை. இத்திட்டம் கடந்த 16.11.2018 உடன் நிறுத்தப்பட்டது. தற்போது, சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது. அனைவராலும் இந்த அலுவலகங்களுக்கு நேரில் சென்று அணுக இயலாது. இந்த நடைமுறையில் பொதுமக்களுக்கு இடையூறுகளே அதிகம். ஆன்லைன் பதிவு வசதியை மீண்டும் ஏற்படுத்தாவிட்டால் அனைத்து அங்கீகாரமற்ற லே-அவுட்கள், பிளாட்களை முறைபடுத்துவது கடினமானதாகி விடும். பல்வேறு விதிமீறல்கள் நடைபெற காரணமாகி விடும்.

எனவே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குநர் உள்ளிட்ேடாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Govt , Government of Tamil Nadu, Ecoort Branch, Notice
× RELATED ஸ்மார்ட் கல்வி முறை சிறப்பாக செயல்படுத்திய மாநகராட்சிக்கு விருது