×

2019ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடம் தாராவி குடிசை பகுதி: தாஜ்மஹாலை தோற்கடித்தது

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக கருதப்படும் தாராவி, 2019ம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் விரும்பி பார்க்கும் இடமாக மாறியிருக்கிறது. உலக அதிசயமான தாஜ் மஹாலையும் அது தோற்கடித்துவிட்டது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களின் பட்டியலை ‘டிரிப் அட்வைசர்ஸ் டிராவலர்ஸ்’ என்ற சர்வதேச அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் எங்கெங்கு செல்ல விரும்புகிறார்கள் என்பது இந்த பட்டியலில் உள்ளது. இதில் ‘ஸ்மால் குரூப் டூர் டு தாராவி இன் மும்பை’ இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல ஆசியாவில் 2019ம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் முதல் 10 இடங்கள் பட்டியலிலும் தாராவி குடிசைப் பகுதி இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் தாஜ் மஹாலின் பெயரே இல்லை. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்க்கும் இடங்களில் தாராவிக்கு அடுத்த படியாக ‘பைக் டூர் ஆப் ஓல்டு டெல்லி’ இரண்டாவது இடத்திலும் ‘சூப்பர் பாஸ்ட் ரயில் மூலமான தாஜ்  மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை டூர்’ மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளவை ‘டெல்லியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக முழு நாள் ஆக்ரா டூர் மற்றும் தாஜ் மஹால் டூர்’, ‘தி ஒரிஜினல் டெல்லி ஷாப்பிங் டூர்’ மற்றும் ‘பாதி நாள் பாலிவுட் டூர் மற்றும் மும்பையில்  லஞ்ச்’ ஆகியவை உள்ளன.
மும்பையின் மத்திய பகுதியில் உள்ள தாராவி குடிசைப் பகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குறுகிய சந்துகளிலும் திறந்த சாக்கடைகளின் ஓரத்திலும் வசித்து வருகிறார்கள். ‘ஸ்லம்டாக் மில்லியனர்ஸ்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் தாராவி இடம் பெற்றதில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்த குடிசைப் பகுதி கவர்ந்து விட்டது. ‘காலா’ மற்றும் ‘கல்லி பாய்’ போன்ற பல திரைப்படங்கள்  தாராவியில் படமாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தாராவி மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.



Tags : Tarawi Cottage Area ,Taj Mahal , Tourists , India , 2019, Tarawi,Defeated, Taj Mahal
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!