×

சிறந்த பராமரிப்புக்காக 2 அணைகளுக்கு விருது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சிறந்த பராமரிப்பு பணிகளுக்காக 2 அணைகளுக்கு விருது வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளது. இந்த அணைகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அணைகளின் சிறந்த பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு ஆண்டும்  தமிழக அரசு சார்பில் விருது மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றது. சிறந்த துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அணைகளை தேர்வு செய்யும் வகையில் அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள் உறுப்பினராகவும், அணைகள் பாதுகாப்பு திட்ட இயக்குனரக  கண்காணிப்பு பொறியாளர் உறுப்பினர் செயலாளராகவும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு அணைகளின் பராமரிப்பு பணி, அணைகளின் பொருத்தப்பட்ட கருவிகள் சிறப்பாக செயல்படுகிறதா? அணைகள் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களின் ெதாகுப்பு என அனைத்தையும் ஆய்வு செய்யும்.

அதன்படி கடந்த 2016-2017, 2017-2018ம் ஆண்டுக்கான சிறந்த அணைகளுக்காக முல்லை பெரியாறு, மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பவானி சாகர், அமராவதி, வாணியாறு, கோமுகி நதி, ஆணைமதுகு, காரியக்கோயில், பொன்னணி ஆறு ஆகிய  அணைகள் இக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து இந்த குழுவின் கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் சிறந்த அணைகளை அந்த குழு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து 2016-2017ம் ஆண்டில் சிறந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதற்காக  பெருஞ்சாணி அணையும், 2017-2018ம் ஆண்டுக்கான சிறந்த பராமரிப்பு பணிக்காக பவானி சாகர் அணையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட அணைகளுக்கு ரொக்க பரிசு, விருதுகள் வழங்கப்படும். மேலும் இந்த அணைகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு ஊக்க தொகை  வழங்கப்படும். மேலும் இந்த அணைகள் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர்  எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : better maintenance, Award , dams
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...