ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் 14 பேர் பலி : 50 பேர் படுகாயம்

பாமர்: ராஜஸ்தானின் பாமர் மாவட்டம் ஜசோல் பகுதியில் பந்தல் சரிந்து விழுந்ததில், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் 14 பேர் பலியாயினர், 50 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தானின் பாமர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் பகுதியில், ‘ராம் கதா’ என்ற ஆன்மிக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர்  அமர்ந்திருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியது. இதில் இரும்புத் தூண்கள் சரிந்து விழுந்தன. இதில் அடிபட்டு 14 பேர் பலியாயினர், 50 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு  செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் அசோக் கெலாட் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இங்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவத்துக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘ராஜஸ்தான் பந்தல் சரிந்து விபத்து ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. பலியானவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய  வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : pilgrims ,Rajasthan , Rajasthan,pilgrims,50 injured
× RELATED பக்தர்கள் நலன் காக்கும் பழநி பெரியநாயகி