×

மழைநீர் சேமிப்பை அரசு கட்டாயமாக்க தவறியது : ஆதிலட்சுமி லோகமூர்த்தி, வக்கீல்

மனிதன் வாழ குடிநீர் அத்தியாவசிய தேவை. இந்த குடிநீரை தரவேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை. அதற்கு அரசு மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீண்ட கால திட்டங்கள் போட வேண்டும்; இல்லையென்றால் மக்கள் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி இறங்கி விடும். படிப்படியாக இப்படி தண்ணீருக்காக நாம் எதுவும் செய்யாததால் தான் நிலைமை மோசமாகி விட்டது. அந்த நிலைதான் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை கொண்டு வந்த இதே அரசு அதை முழு வீச்சில் செய்யவில்லை. இதனால், மழைக் காலத்தில் பல நூற்றுக்கணக்கான டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிடுகிறது. இதனால் கோடை காலத்தில் வறட்சி. மற்ற மாநிலங்களிடம் குடிநீருக்காக கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் சரியான நிர்வாகம் இல்லாததுதான். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரும்போது அவர்கள் வேறு வழியில்லாமல் நீதிமன்றங்களை நாடுகிறார்கள். நீதிமன்றம்தான் மக்களின் இறுதி நம்பிக்கை. ஆனால், தண்ணீருக்காக நீதிமன்றங்களுக்கு ெசல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

நீர் ஆதாரங்களை பாதுகாக்க அரசு உரிய சட்டங்களை இயற்றி முழு அளவில் அமல்படுத்த வேண்டும். நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை ஆழப்படுத்தி மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க வழி ஏற்படுத்தி தரவேண்டும். இதற்கெல்லாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றங்கள் உத்தரவுகள் தவிர்க்க முடியாததாகிவிடும். சட்டம் இல்லையென்றாலும் நீதிமன்ற உத்தரவுகளால் திட்டங்களை செயல்படுத்த முடியும். விசாகா பிரச்னையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. அதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றம்தான் வகுத்தது. அந்த வழிமுறைகள்தான் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அரசுகள் சட்டம் இயற்றவில்லை என்றாலும் நீதிமன்ற வழிகாட்டுதல்களே போதுமானது. அந்த அடிப்படையில்தான் தற்போது தண்ணீர் கேட்டு பொதுமக்கள் நீதிமன்றங்களை நாடி வருகிறார்கள்.  அரசு செய்யத் தவறும் காரியங்களை நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியும். சட்டம் இயற்றப்படவில்லை என்றாலும் நீதிமன்ற வழிகாட்டுதல்களால் பிரச்னைகளைளுக்கு தீர்வுகாண முடியும்.  

வெள்ள நேரத்தில் தண்ணீரை சேமித்து வைக்காமல் வறட்சி நேரத்தில் தண்ணீர் இல்லை என்று கூக்குரல் எழுப்புவதை ஏற்க முடியாது. மக்களிடம் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பை சட்டமாக்கி கட்டாயமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால்,  இதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. தங்களின் உரிமைக்காக போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. அந்த வகையில்தான் தற்போது பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடி வருகிறார்கள். பொதுமக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் மட்டுமே. அதனால்தான் தண்ணீர் தொடர்பான வழக்குகள் கடந்த ஒரு மாதமாக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசு சட்டம் இயற்றவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற மக்களின் நம்பிக்கை. நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களால் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இதற்கு காரணம். எனவேதான் தண்ணீருக்காக மக்கள் நீதிமன்றங்களின் கதவுகளை தட்டுவது அதிகரித்துள்ளது.

Tags : Adilakshmi Lokamoorthy , mandate rainwater harvesting, Adilakshmi Lokamoorthy
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...