×

தவளக்குப்பம் அருகே அரசு இடத்தில் குடிசை போட்ட கிராம மக்கள் : அதிகாரிகளுடன் வாக்குவாதம்- பரபரப்பு

பாகூர்: தவளக்குப்பம் அருகே அரசு இடத்தில் குடிசை போட்ட கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவளக்குப்பம் அருகே அபிசேகப்பாக்கத்தில் கடந்த 45 வருடங்களாக பொதுமக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படவில்லை. கடைசியாக 1972ம் ஆண்டு சேத்திலால் கவர்னராக இருந்தபோது மனைப்பட்டா வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக மனைப்பட்டா வழங்காததால் ஒவ்வொரு வீட்டிலும் 2க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு இடம் தேர்வு செய்யப்பட்டு 135 இலவச மனைப்பட்டா ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த மனைப்பட்டா போதுமானதாக இல்லாததால் அப்பகுதி மக்களுக்குள் பிரிவினை ஏற்படும் என்பதால் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அரசு வாக்குறுதி அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் கிடப்பில் உள்ளது. தற்போது அந்த இடம் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அபிசேகப்பாக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசால் ஏற்கனவே ேதர்வு ெசய்யப்பட்டு வைத்திருந்த இடத்தில் பொதுமக்கள் தாங்களாகவே குடிசை போட ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் நியுட்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு குடிசை போட்டுக் கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் தேர்வு செய்து கொடுத்தால் தான் இடத்தை எடுக்க வேண்டும். நீங்களாகவே குடிசை போடக் கூடாது என அறிவுறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாங்கள் எங்கே குடும்பம் நடத்துவது என போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து போலீசார் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  

சம்பவ இடத்துக்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், கல் போட்டு அளந்த பிறகு தான் நீங்கள் இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம். 135 மனையில் யார் யாருக்கு வேண்டும் என ஊர் மக்களே முடிவு செய்து கொண்டு வாருங்கள். அவர்களுக்கு நாங்கள் மனைப்பட்டா கொடுக்கிறோம் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த லோகஅருள்தாஸ் என்பவர் கூறியதாவது:  இப்பகுதியில் 45 வருடத்துக்கும் மேலாக இலவச மனைப்பட்டா வழங்கவில்லை. மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. குறைந்தபட்சம் 400 மனைப்பட்டா இருந்தால் தான் ஊர் மக்களுக்கு போதுமானதாக இருக்கும். 135 மனைப்பட்டா மட்டும் வழங்கினால் மக்களுக்குள் பிளவு தான் ஏற்படும். எவ்வளவு போராட்டம் நடத்தியும் நிலைமை மாறவில்லை. மக்கள் போராட்டம் நடத்துவதும், அரசு பேச்சுவார்த்ைத நடத்துவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கம் இப்பிரச்னையில் தலையிட்டு அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Village people ,government hut ,Thalakuppam , The frog, the government, the villagers
× RELATED திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு...