×

குற்றாலத்தில் சாரல் மழை: அருவிகளில் கூட்டம் அதிகரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு சீசன் வழக்கத்தை விட 10 நாட்கள் தாமதமாக தொடங்கிய நிலையில் அரபிக் கடலில் உருவான புயலால் 3 நாட்கள் நீடித்து பின்னர் ‘சுள்’ளென்று வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அடியோடு குறைந்து காணப்பட்ட நிலையில் கடந்த மூன்று தினங்களாக வெயில், மழை என இதமான சூழல் நிலவுகிறது.  அவ்வப்போது லேசான சாரல் காணப்படுகிறது. மிதமான தென்றல் காற்று வீசுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேகமூட்டம் தவழ்ந்து செல்கிறது.

இதன் காரணமாக கடந்த 3 தினங்களுக்கு முன்பு விழுந்ததை விட தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாக விழுகிறது. பெண்கள் பகுதியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் தண்ணீர் ஓரளவு நன்றாக விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுகிறது விடுமுறை தினமான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளிலும், ஐந்தருவியில் ஆண்கள் பகுதியிலும், சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Courtallam , Courtallam, rainfall, waterfalls
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...