×

தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் லாரிகள்

* ஒரு லோடு ரூ.900க்கு வாங்கி ரூ.5000 வரை விற்பனை
* மெட்ரோ லாரிகளை எதிர்பார்க்கும் ஏழை மக்கள்
* கண்டுகொள்ளாத அமைச்சர்கள், அதிகாரிகள்?

சென்னை: தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி சென்னையில் தனியார் லாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க தொடங்கியுள்ளன. ஒரு லோடு தண்ணீர் ரூ.900 ரூபாய்க்கு வாங்கி ரூ.5000க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அமைச்சர்கள், அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிப்பதற்கே தண்ணீருக்காக அலையும் நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது.  

தண்ணீர் பிரச்னைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் வீடுகளை காலி செய்து விட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆழ்துளை கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரும் 300 அடி, 400 அடி என்று சென்று விட்டது. பல இடங்களில் 400 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால், பல ஆயிரம் செலவு செய்தும் தண்ணீர் எடுக்க முடியாத நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.

நிலத்தடி நீர் வறண்டு போனதால் சென்னையில் வசிக்கும் மக்கள் மெட்ரோ நீரையே நம்பி தற்போது காலம் கடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மெட்ரோ நீரை பெற ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்ய வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் புக்கிங் செய்தால்தான் மெட்ரோ வாட்டரை பெற முடியும். 6000 லிட்டர் மெட்ரோ நீருக்கு ரூ.475, 9 ஆயிரம் லிட்டர் மெட்ரோ நீருக்கு ரூ.750 கட்டணமாக பெறப்படுகிறது. சாதாரண நாட்கள் ஒருவர் மெட்ரோ வாட்டரை புக்கிங் செய்தால் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்குள் தண்ணீர் கிடைத்து விடும். தற்போது புக்கிங் செய்தால் குறைந்த பட்சம் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைப்பதால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் அவசரத்துக்கு தண்ணீர் கேட்டு விண்ணப்பித்தவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் அமைச்சர்கள், அதிகாரிகள், வசதி படைத்தவர்கள் தண்ணீருக்கு புக்கிங் செய்தால் உடனுக்குடன் தாராளமாக தண்ணீர் சப்ளை செய்வதாகவும் புகார் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெட்ரோவில் 900 லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் மூலம் தான் நகர் முழுவதும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது.

தண்ணீர் தட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு தனியார் லாரிகள் தண்ணீரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க தொடங்கியுள்ளன. ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீரை எடுக்கின்றனர். மேலும் புறநகர் பகுதியில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுக்கப்படும் தண்ணீர் ரூ.900 என்று ஒரு லாரிக்கு விற்கப்படுகிறது. அங்கிருந்து பொதுமக்களுக்கு ஒரு லோடு தண்ணீர் ரூ.4000 முதல் ரூ.5000 வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலமாக லட்சக்கணக்கில் பணம் கொழிப்பதாக கூறப்படுகிறது. தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் தண்ணீரை வாங்கி பயன்படுத்தியும் வருகின்றனர். தண்ணீரை அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று உள்ளது.

அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் விதி உள்ளது. ஆனால் அவர்கள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை கொடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் தண்ணீர் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் வசதி குறைந்தவர்கள் மெட்ரோ வாட்டர் லாரி எப்போது வரும் என்று தெரியாமல் இரவு, பகல் பார்க்காமல் கால்கடுக்க தெருக்களில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக அதிக விலைக்கு தண்ணீரை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Tags : Water problem, cause, robbery, private trucks
× RELATED கன்டெய்னர் லாரிகளில் பயணம் 178 தொழிலாளர்கள் மீட்பு