×

வெளிவராத புதிய தகவல் அம்பலம் சென்னையில் விவிஐபிகளுக்கு குடிநீர் வழங்க 130 ‘ஸ்பெஷல் லைன்’: பைவ் ஸ்டார் ஓட்டல்களுக்கு கைமாறும் மெட்ரோ வாட்டர்


* தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் சென்னையில் மட்டும் 130 ‘ஸ்பெஷல் லைன்’ சென்னை குடிநீர் வாரியம் விவிஐபிகளுக்கு கொடுத்திருக்கும் தகவல் கேட்பவர்களை தலைசுற்ற வைக்கிறது.

சென்னை: சென்னை மாநகரில் மட்டும் விவிஐபிகளுக்கு 130 ஸ்பெஷல் லைன் அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து நேரடி பைப் இணைப்பு குடிநீர் வழங்கப்பட்டிருக்கும் புதிய தகவல் அம்பலமாகியுள்ளது. மேலும் மக்களுக்கு வழங்க வேண்டிய மெட்ரோ வாட்டர் பல ஆயிரங்களுக்காக நட்சத்திர விடுதிகளுக்கு கைமாறுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தண்ணீருக்காக கண்ணீர் விடும் தாய்மார்கள் படும் அல்லல்கள் சொல்லொனா துயரத்தை காட்டுகிறது. பள்ளிகளில் தண்ணீர் இல்லாததால் விடுமுறை விடப்படும் அவலம். மருத்துவமனைகளில் தண்ணீர் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படும் அவலம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வானுயர கட்டிட பணிகள் எல்லாம் அப்படியே நிறுத்தப்படும் அவலம்.

இதனால் கட்டிட கான்ட்ராக்டர்களுக்கு நஷ்டம். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு வருவதை பார்த்தால் சென்னை வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் தண்ணீருக்காக மக்கள் அல்லலோலப்படும் சூழ்நிலையில் மறுபுறம் மக்களுக்கு வழங்க வேண்டிய சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் விவிஐபிகளுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கும் அதிக விலைக்கு கைமாறுவதாக கூறப்படும் தகவல் மக்கள் மத்தியில் ெகாந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர் முற்றிலுமாக அதால பாதாளத்துக்கு சென்று விட்டதால் எந்த வீடுகளிலும் போர்வெல்களில் தண்ணீர் இல்லை. சென்னை புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை தனியார் லாரிகள் உறிஞ்சி எடுத்து ஒரு லாரி தண்ணீர் ₹5000க்கும் மேல் விற்பனை செய்வதால் அதை சாதாரண மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சுவதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பல ஆயிரம் பணம் கொடுத்தாலும் தனியார் லாரி தண்ணீரும் மக்களுக்கு அவ்வளவு சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை.
தனியார் லாரி தண்ணீரை நம்பி தொழில்கள் எல்லாம் இப்போது முடக்கப்படும் அபாயத்தில் உள்ளது. அதாவது பெரிய ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் எல்லாம் வேறு வழியில்லாமல் மூடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் கிடைக்கும் லாரி தண்ணீர் மட்டுமே சென்னை மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. இப்படி சென்னை குடிநீர் வாரியம் மூலம் கிடைக்கும் தண்ணீர் இப்போது சென்னை மக்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த லாரி தண்ணீரை மக்களுக்கு வழங்காமல் விஐபிகளுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கும் பல ஆயிரம் ரூபாய்களுக்காக கைமாறும் தகவல் மக்களிடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் திருட்டுதனமாக விற்பனை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஆன் லைன் மூலம் புக் செய்தால் 750க்கும் வழங்க வேண்டிய லாரி தண்ணீர் அதிக தொகையை பெற்றுக் கொண்டு ஆளுங்கட்சியினருக்கும், விஐபிகளுக்கும் வழங்குவதால் நாள்கணக்கில் லாரி தண்ணீர் வராதா என்று ஏங்கி தவிக்கும் மக்களை பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இப்படி ஒருபுறம் முறைகேடு நடக்கிறது என்றால், இன்னொரு புறம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் சென்னையில் மட்டும் 130 ‘ஸ்பெஷல் லைன்’ சென்னை குடிநீர் வாரியம் விவிஐபிகளுக்கு கொடுத்திருக்கும் தகவல் கேட்பவர்களை தலைசுற்ற வைக்கிறது. இந்த ஸ்பெஷல் லைன் என்பது ஒவ்வொரு நீரேற்று நிலையங்களில் இருந்தும் சம்பந்தப்பட்ட விவிஐபிகளின் கட்டிடங்களுக்கு நேரடியாக கொடுக்கப்படும் கனெக்‌ஷனாம்.

இந்த குடிநீர் இணைப்பு இருந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் நேரடியாக வருமாம். அப்படி என்றால் ஒரு லைன் மூலம் எவ்வளவு தண்ணீரை பெறலாம் என்பதை நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. நீரேற்று நிலையங்களில் எப்படியும் தண்ணீர் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இதனால் 24 மணி நேரமும் இந்த இணைப்பு மூலம் தண்ணீரை பெற்று கொண்டே இருக்கலாமாம்.சென்னையில் மக்கள் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படி ஒரு கனெக்‌ஷன் மூலம் சென்னை குடிநீர் வாரியம் அவர்களுக்கு தண்ணீர் வழங்குவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் குடங்களுடன் காத்திருக்கும் மக்கள் மத்தியில் இந்த ‘ஸ்பெஷல் லைன்’ விவகாரம் தற்போது பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, முன்னாள் மேயரும், தற்போதைய காங்கிரஸ் மாவட்ட தலைவருமான கராத்தே தியாகராஜன் கூறியதாவது: சென்னையில் மக்கள் தண்ணீருக்காக படும் பாடு எல்லாரும் அறிந்த ஒன்று. நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை குடிநீர் வாரியமும் மக்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதையும் தாண்டி சென்னை மாநகருக்குள் மட்டும் 130 ஸ்பெஷல் லைன் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது உண்மை தான். இதில் சில நட்சத்திர விடுதிகளும் டாப் மல்ட்டிநேஷனல் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் விவிஐபிகளுக்கு இந்த மாதிரியான ஸ்பெஷல் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நேரடியாக நீரேற்று நிலையங்களில் இருந்து நேரடியாக பைப் லைன் போட்டு செல்கின்றனர்.இந்த இணைப்புகள் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் நேரடியாக சென்றடைகிறது. அவர்கள் அந்த தண்ணீரை தங்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்களா? என்பதும் ஒரு கேள்வி குறியாக உள்ளது.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இந்த ஸ்பெஷல் லைன் மூலம் விவிஐபிகளுக்கு செல்வது எந்த வகையில் நியாயம். இப்படி ஒரு இணைப்பு கொடுக்க விதிகள் உள்ளதா? என்பதை பற்றி எல்லாம் நான் கேள்வி கேட்கவில்லை. மக்கள் தற்போது தண்ணீருக்காக அல்லல்படும் சூழ்நிலையில் உடனடியாக இந்த ‘ஸ்பெஷல் லைன்’ இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை. இதில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா அல்லது ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை கிளறும் நான் விரும்பவில்லை. மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து 130 ஸ்பெஷல் இணைப்புகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : VVIPs ,Chennai , Chennai, VVIP, Drinking Water, Five Star Hotel, Metro Water
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...