×

வங்கி, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத, ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: வங்கிகள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனது துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணி விவரங்களை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோரையும் பணியாற்றாமல் டிமிக்கி கொடுப்பவர்களையும் நீக்க நடவடிக்கை எடுக்கும்படி அந்த உத்தரவில்  அறிவுறுத்தி உள்ளது.  மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், அலுவலர்களின் பணி நிலவரம் பற்றிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் விசாரணை இல்லாமல் பணி ஓய்வு பெற்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

 “அனைத்து அமைச்சகங்கள், துறைகள் குறிப்பிட்ட கால முறையில் ஊழியர்கள் பணி நிலவரம் பற்றிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அரசு துறை பொது நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் இந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். தன்னாட்சி பெற்ற அரசு நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்த சட்ட நடைமுறையில், பொது நலன் கருதி ஓர் அரசு ஊழியரை அவரது பணி காலத்திற்கு முன்னதாகவே கட்டாய ஓய்வில் செல்ல உத்தரவிடும் முடிவை அமல்படுத்துவதை அனைத்து அமைச்சகங்கள் அல்லது துறைகள் உறுதி செய்ய வேண்டும்.  அனைத்து அரசு துறைகளும் நிறுவனங்களும் வரையறுக்கப்பட்ட முறையில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் மத்திய பணியாளர் துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் 15ம் தேதி அமலுக்கு வருகிறது.

 வங்கிகள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், அலுவலர்களின் பணி நிலவரம் குறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள வழிகாட்டி விதிமுறைகளின்படி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசுகையில், ஊழல்  ஒழிப்பில் அரசு எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாது என்று கூறியது  குறிப்பிட்டத்தக்கது.

கட்டாய ஓய்வு
“ஓர் அரசு ஊழியரின் நன்னடத்தை சந்தேகப்படும் நிலையில் இருந்தாலோ, பணிபுரிய தகுதியற்றவராக இருந்தாலோ, பொதுமக்கள் நலன் கருதி அவரை கட்டாய ஓய்வில் செல்லுமாறு உத்தரவிட புதிய விதிமுறைகள் அனுமதி அளிக்கிறது” என்றும் அந்த அதிகாரி கூறினார்.  மத்திய அரசு சமீபத்தில் 15 ஐஆர்எஸ் அதிகாரிகளை (சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் துறை) பொது நலன் கருதி இந்து புதிய விதிமுறைகளின்படி கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வருமான வரித்துறையில் பணியாற்றிய 12 ஐஆர்எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Tags : enterprises , Banking, Government PSUs, Corrupt Employees, Central Government
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது