×

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் உயிரிழப்பு அதிகரிப்பு ஹெல்மெட் அணியாததால் பலியானவர்கள் எத்தனை பேர்?

சென்னை:  பெருகி வரும் வாகன விபத்தை தடுக்க இருசக்கர வாகனத்தில் செல்வோர்  ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,  சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும்  வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுக்கு பின் வாகன சோதனை பணியில் தலைமை காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாதவர்களை சி.சி.டி.வி மூலம் கண்காணித்து அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 2007ல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தின் உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. அரசின் இந்த நடவடிக்கையால் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக அதிகமாகி வருகிறது. இது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது.
தற்போது, 80 முதல் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதாக கூறுவதை ஏற்க முடியாது. பின்னால் அமர்ந்திருப்பவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவதில்லை. போக்குவரத்து துறை ஆணையரின் அறிக்கையில், ஹெல்மெட் அணியாததால் 75 விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இனியும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றமே வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். இந்த வழக்கில் சுகாதாரத்துறையை இணைத்து உத்தரவிடுகிறோம். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று மரணமடைந்தவர்கள் எத்தனை பேர், எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளன, விபத்தில் தலையில் படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது தொடர்பான விவரங்களை சென்னை போலீஸ் கமிஷனர் வரும் 28ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : non-implementation , How many people, killed , wearing a helmet
× RELATED காவிரியில் இருந்து பஞ்சப்பட்டி...