×

தனியார் பள்ளி கல்வி கட்டண விபரம் வெப்சைட்டில் வெளியிட ஒரு மாதம் அவகாசம்

மதுரை: தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விபரத்தை வெப்சைட்டில் வெளியிட மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த ஹக்கீம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்ேபால கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். முறையான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் பள்ளிக்கல்வி கட்டண நிர்ணயக்குழு 2018-21 வரையிலான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து வெளியிடவில்லை. தற்போது, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே தனியார் பள்ளிகளுக்கான 2018-21ம் கல்வி ஆண்டு வரையிலான கல்விக்கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தனியார் பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக் குழுவினர் அனைத்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், மெட்ரிக்குலேசன் மற்றும் துவக்கப்பள்ளி இயக்குநர், தனியார் பள்ளிக்கல்வி கட்டண நிர்ணய குழுவின் சிறப்பு அதிகாரி ஆகியோர், கடந்தாண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெப்சைட்டில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், வெப்சைட்டில் வெளியிட 3 மாத கால அவகாசம் ேவண்டுமென கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேலும் ஒரு மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.


Tags : Private school, tuition fee details
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...