×

உங்க சண்டையால என் பொழப்பு போச்சு.... சுங்க சாவடியில் பணம் கட்டி அரசு பஸ்சை மீட்ட பயணி

நாங்குநேரி: நெல்லை அருகே சுங்க சாவடியில் பணம்கட்ட மறுத்ததால் பயணி ஒருவர் அதற்கான கட்டணத்தை செலுத்தி அரசு பஸ்சை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் பஸ்களில் பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் ஐம்பதோ, நூறோ கொடுத்து சில்லரை தரும்படி கேட்போம். அவர் தர மறுத்தால் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்வோம். நீண்ட சண்டைக்கு பிறகு நமக்கு சில்ரை காசு வந்து சேரும். இது அன்றாடம் பஸ்களில் நடக்கும் காட்சி. ஆனால் இங்கே ஒரு பயணி அரசு பஸ்சுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்தி பஸ்சை மீட்டு அசத்தியிருக்கிறார். அதுபற்றி விவரம்: சென்னையில் இருந்து நேற்று முன்திம் நள்ளிரவு 12 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் நேற்று மதியம் 12.30 மணிக்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் பஸ்சிற்கு சுங்க கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா? என பஸ்சில் ஒட்டப்பட்டிருந்த மைக்ரோ சிப்பை ஸ்கேன் செய்தனர். அதில் பணம் செலுத்தியதற்கான சிக்னல் காட்டவில்லை. இதைத்தொடர்ந்து ஊழியர்கள், உங்கள் நிர்வாகத்தில் இருந்து இந்த பஸ்சிற்கு சுங்க கட்டணம் செலுத்தவில்லை என தெரிகிறது. நீங்கள் செலுத்துங்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு டிரைவர், கண்டக்டர் நாங்கள் வரும் வழியில் உள்ள எல்லா சுங்க சாவடியிலும் கட்டணம் கட்டிவிட்டுதான் வருகிறோம் என்றனர். அப்படியென்றால் அதற்கான ரசீதை காட்டுங்கள் என்றனர். அவர்கள் காட்டவில்லை. நீங்கள் பணம் கட்டினால்தான் பஸ்சை எடுக்கவிடுவோம் என உறுதியாக கூறிய ஊழியர்கள், பஸ் செல்லவிடாமல் தடுப்பை ஏற்படுத்திவிட்டனர். பஸ் ரொம்ப நேரம் நிற்பதை பார்த்த பயணிகள் சிலர் கீழே இறங்கி வந்து டிரைவர், கண்டக்டருக்கு ஆதரவாக பேசினர். ஆனால் அதையெல்லம் அவர்கள் பொருட்படுத்தாமல், பணம் கட்டினால் மட்டும்தான் பஸ்சை விடுவிக்க முடியும் என்று பிடிவாதம் பிடித்தனர். அந்த நேரம் பார்த்து பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த 65 வயது மதிக்க தக்க பெரியவர் கண் விழித்து, இங்கு என்ன நடக்கிறது, ஏன் பஸ் நிற்கிறது. ஏதும் ரிப்பேரா என சக பயணிகளிடம் விசாரித்தார். அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்... பஸ்சிற்கு சுங்க கட்டணம் செலுத்தவில்லையாம். அதனால் ஊழியர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தி வைத்துள்ளனர் என்றனர். அதை கேட்ட முதியவர் வேகமாக பஸ்சில் இருந்து இறங்கி வந்து, உங்க சண்டையால என் பொழப்பு போயிடும் போல இருக்கு... குறிப்பிட்ட நேரத்தில நான் போயாகனும் என்று படப்படத்த அவர், நேராக கட்டணம் செலுத்தும் இடத்திற்கு சென்றார். ஏம்பா... சுங்க கட்டணம்தானே கட்டணும்... எவ்வளவு என்று கேட்டார். அதற்கு ஊழியர்கள், ரூ.305 என்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெரியவர் தனது பர்சில் இருந்து ரூ.500ஐ எடுத்து ஊழியர்களிடம் நீட்டினார். திடீரென பயணி ஒருவர் பணத்தை கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ஏன் சார்... அவங்க தர வேண்டிய பணத்தை நீங்க தர்றீங்க... நீங்க தருவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவங்களே கட்டட்டும் என்று பணத்தை வாங்க மறுத்து விட்டனர். உங்களுக்கு தேவை கட்டணம். அதை யார் கொடுத்தா என்ன? என பெரியவரும் வாக்குவாதம் செய்தார். அவருக்கு ஆதரவாக பயணிகளும் களத்தில் இறங்கினர். முடிவில் வேண்டா வெறுப்பாக முதியவர் கொடுத்த 500 ரூபாயை வாங்கிய ஊழியர்கள் சுங்க கட்டண தொகை ரூ.305ஐ மட்டும் எடுத்துக்கொண்டு மீதி தொகையை ரசீதுடன் நீட்டினர். பணம் கட்டியபிறகுதான் அரசு பஸ் விடுவிக்கப்பட்டது. பயணி ஒருவர் அரசுக்காக தானே பணம் செலுத்தி பஸ்சை மீட்ட சம்பவத்தால் டிரைவர், கண்டக்டர் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது. இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் தாமதமாக பஸ் கிளம்பி சென்றது. சொந்த பணத்தால் பஸ்சை மீட்ட முதியவர் பெயர், ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை. அவருக்கு ஏதோ அவசர வேலை என்பது மட்டும் தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : toll booth , Nellai, Toll Gate, Government Bus
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...