குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... பாட புத்தகங்களை சுமக்காமல் குடங்களை சுமக்கும் மாணவர்கள்

திருவண்ணாமலை: தமிழகத்தில் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. காலி குடங்களுடன் மக்கள் தண்ணீரை தேடி அலைகின்றனர். குடிநீர் ஆதாரங்களாக அமைந்துள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டதாலும் ஆக்கிரமிப்பு காரணமாகவும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயலிழக்க தொடங்கிவிட்டது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் குடிநீர் பஞ்சம் இல்லை என்று சப்பைக் கட்டு கட்டி வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, பெட்டிக்குப்பம் பகுதியில் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தில், நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் கூட அங்கிருந்து விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அம்மா குடிநீரும் ‘அதோகதி’யாகி விட்டது. ஆனால், தனியார் நிறுவன தண்ணீர் பாட்டில்கள் மட்டும் தாராளமாக கிடைக்கிறது.

மாணவர்கள் தவிப்பு

கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் பல மாணவர்கள் தங்கள் அம்மாக்களுக்கு உதவியாக சில கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலைமை உள்ளது. இதனால் பள்ளிக்கு வர முடியாமல் பல மாணவர்களின் படிப்பு பாழாகிறது. பள்ளிக்கூடங்களுக்கு வந்தாலோ அங்கும் தண்ணீர் பஞ்சம் தாண்டவமாடுகிறது. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. கழிவறைக்கு சென்றாலும் தண்ணீர் இல்லை.
திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதன்காரணமாக மாணவர்கள் நேற்று உணவு இடைவேளையின் போது, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழாயிலிருந்து வாட்டர் பாட்டில்கள் மற்றும் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த அவல நிலைமை தமிழகம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

வீணாகும் குடிநீர்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி ஊராட்சி எடப்பாளையம் கிராமத்திற்கு போர்வெல் அமைக்கப்பட்டு அங்குள்ள 30 ஆயிரம் கொள்ளளவு உள்ள குடிநீர் டேங்க்குக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த குடிநீர் பைப்பில் 2இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிவப்படும் நிலையில் இவ்வாறு குடிநீர் வெளியேறுவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : pitchers , Drinking water, drought, school, students
× RELATED வறுமையிலும் படிப்பில் ஆர்வம் காட்டிய...