×

இறந்த யானைகளின் உடல்களை உண்டதால் 500க்கும் மேற்பட்ட அரிய வகை கழுகுகள் மரணம்: ஆப்பரிக்காவில் மர்மம்!

கபோரோன்: ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் உடல்களை உண்டதால் 500க்கும் மேற்பட்ட அரிய வகை கழுகுகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை உண்ட 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக கழுகுகள் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் சடலங்களை உண்பது வழக்கம். ஆனால், இந்த யானைகளின் சடலங்களை தின்ற கழுகுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. கழுகுகளின் மரணம் குறித்து பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், வேட்டையாடப்பட்ட மூன்று யானைகளின் சடலங்களில் நச்சுத்தன்மை கலந்துள்ளது.

இதனை உண்ட கழுகுகள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இறந்த கழுகுகளில் 468 கழுகுகள் வெண்முதுகுப் கொண்ட கழுகுகள் ஆகும். இவை, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பில் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அழியும் விளிம்பிலிருக்கும் கழுகு இனம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றுள் டவினி எனப்படும் அரிய வகை கழுகுகள் 2 , 17 வெண்தலை கழுகு, 28 ஹூடட் என்ற வகை கழுகுகள் பரிதாபமாக இறந்துள்ளன. இறந்த யானைகளின் சடலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த கழுகுகள் எந்த இடத்தில் உள்ளன? யானைகளின் சடலங்களில் நச்சுத்தன்மைக்கான காரணம் என்ன? என்பது பற்றிய விரிவான தகவலை போட்ஸ்வானா வனவிலங்கு சரணாலய வனத்துறை வெளியிடவில்லை.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓர் உயிரினம் இறந்துவிட்டாலோ அல்லது இறக்கும் தறுவாயில் இருந்தாலோ, வானத்தில் வட்டமடிக்கும் கழுகுகளை அழிக்க இந்த செயலை யானை உறுப்புகளை திருடும் வேட்டைக்காரர்கள் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கழுகுகள் வானத்தில் வட்டமிடுவதால் காட்டுக்குள் ஏற்படும் மரணங்களைத் தெரிந்துகொள்வது வனத்துறைக்கு மிகவும் சுலபமாக உள்ளது. அதன்மூலம் சம்பவ இடத்திற்கு வரும் வனத்துறையால் வேட்டைக்காரர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். இதனாலேயே வேட்டையாடப்பட்ட யானையின் சடலத்தில் வேட்டைக்காரர்கள் விஷத்தை கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Africa , Elephants, dead, eagle, Death, Africa, poison
× RELATED 3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்...