×

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: கலெக்டர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கலில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிலை அறிக்கை  தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த இளையராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் சுற்றி சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுத்து  வருகின்றன. தற்போது தண்ணீர் பஞ்சம் அதிகரித்து உள்ள நிலையில் நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில்  அரசிடம் இருந்து அனுமதி பெறாமல்  நிலத்தடி நீரை, தண்ணீர் சப்ளை செய்யும் பல நிறுவனங்கள்  சட்டவிரோதமாக எடுத்து வருகின்றன.

 இதுதொடர்பாக கடந்த மே மாதம்  சென்னை கலெக்டர், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நங்கநல்லூர்,  பழவந்தாங்கல் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக சென்னை கலெக்டர்,  சென்னை  மாநகராட்சி, குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஆகியோர் வரும் திங்களன்று நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Tags : companies ,Collector , Illegal, groundwater , Case demanding ,Collector, Report ,Icort Directive
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...