×

கதிராமங்கலத்தில் பரபரப்பு கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: 200 மீட்டர் தூரம் வழிந்தோடியது

கும்பகோணம்: கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 200 மீட்டர் தூரம் வழிந்தோடி ஆற்றில் கலந்தது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு எடுத்து வருகிறது. இந்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை குழாய் மூலம் குத்தாலம் சேகரிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்கின்றனர்.

2017 ஜூன் 30ம் தேதி கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோயில் பகுதியில் உள்ள எண்ணெய் ஆழ்குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது கதிராமங்கலம் பகுதியில் எண்ணெய் நிறுவனம் எந்த ஆய்வு பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது, உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தினர்.  

இந்நிலையில் கதிராமங்கலம் வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் விக்கிரமன் ஆற்றுப்படுகையில் கச்சா எண்ணெய் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. அப்போது குழாயில் இருந்து புகையுடன் கச்சா எண்ணெய் வெளியேறியது. இந்த கச்சா எண்ணெய், விக்ரமன் ஆற்று பகுதியில் 200 மீட்டர் நீளத்துக்கு ஓடியது. தகவலறிந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வந்து அந்த குழாய் மூலம் கச்சா எண்ணெய் செல்வதை தற்காலிகமாக நிறுத்தினர்.

எனினும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கச்சா எண்ணெய் எடுப்பதற்கான குழாய்கள் பதித்து 17 ஆண்டுகளான நிலையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றனர்.

Tags : Kataramangalam , Kathiramangalam, Parabharam, crude oil, pipeline, breakage
× RELATED கதிராமங்கலத்தில் 2வது நாளாக கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு சீரமைப்பு