×

குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்வதில் அதிமுக அரசு தோல்விக்கு பொறுப்பேற்று அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்வதில் அதிமுக அரசு தோல்விக்கு பொறுப்பேற்று அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ15 ஆயிரத்து 838 கோடி செலவில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரில் ரூ2638 கோடியும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ5346 கோடியும், சென்னை தவிர்த்து பிற மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ4440 கோடியும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வளவு தொகை செலவழித்த பிறகும் ஒரு சொட்டு தண்ணீர் கூட புதிதாக இவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று சொன்னால் செலவழிக்கப்பட்ட தொகை என்ன ஆனது?

சென்னை மாநகரைப் பொறுத்தவரை பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர் ஆதாரங்களை தவிர புதிதாக கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. சென்னை மாநகரில் 75 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வாய்ப்பே இல்லாமல் தெருக்களில் காலி குடங்களுடன், குறிப்பாக பெண்கள் கடும் வெயிலில் அலைய வேண்டிய துர்பாக்கிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. குடிநீர் பஞ்சம் என்பது சென்னை மாநகர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களைத் தவிர, 21 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. தமிழகத்தில் உலக வங்கி மூலம் ஏரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 41,127 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் நீர் பயனீட்டாளர்களின் பங்கே இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் ஏரிகள் சூறையாடப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் தடுக்காத காரணத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.

சென்னை மாநகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்க மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைப் போல இன்னும் சில திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் குடிநீர் பிரச்னையை தீர்த்திருக்க முடியும். மூன்றாவது திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்தவரை அதை எதிர்கொள்வதில் அதிமுக அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இதற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறவில்லையே தவிர, குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சருக்கு பதவி விலகுவதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Velumani ,defeat ,AIADMK ,KS Azhagiri , Government of India, Minister Velumani, KS Alagiri
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...