×

கோவையில் குடிநீர் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் குடிநீர் வழங்காததை கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏ கார்த்திக் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகரின் பல வார்டு பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்து 300க்கும் மேற்பட்ட திமுகவினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கோவையில் சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்த்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சூயஸ் நிறுவனம் கோவைக்கு குடிநீர் மையமாக செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான குடிநீர் அணுகலை உறுதி செய்வதற்காகவும், முழு நகரத்திற்கும் நீர் விநியோக முறையை நிர்வகிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூயஸ் நிறுவனத்துடன் கிட்டத்தட்ட 3,600 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனம் வேறு ஒரு நாட்டில் இருந்த போது அங்கு முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்பதால் அந்நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது கோவையில் இந்த நிறுவனத்தை நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கண்டிக்கத்தக்க ஒன்று என போராட்டம் நடத்தி வரும் திமுகவினர் முழக்கமிட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக இந்த முற்றுகை போராட்டம் திமுக தலைமையில் நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் காலி குடங்களுடன் நின்று தங்களுக்கு உடனடியாக தண்ணீர் வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர். கோவைக்கு சிறுவாணி, பில்லூரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பொய்த்து போன பருவமழையின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போவதால், தண்ணீருக்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : protestors ,DMK ,office , Coimbatore, drinking water, DMK, demonstration
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...