‘வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு’ என முழக்கமிட்டு மக்களவையை அதிர வைத்த தமிழக எம்பி.க்கள்: தமிழில் உறுதிமொழி ஏற்றனர்; பாஜ எதிர் கோஷத்தால் பரபரப்பு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று 2வது நாளாக எம்பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவியேற்று ‘வாழ்க தமிழ்; வளர்க தமிழ்நாடு’ என முழக்கமிட்டனர். பதிலுக்கு பாஜ எம்பி.க்கள் எதிர் கோஷமிட்டதால் மக்களவையில் சலசலப்பு நிலவியது.  மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியது. முதல் நாளில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் புதிய எம்பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பல்வேறு மாநில எம்பி.க்கள் அவர்களின் தாய்மொழியிலும், விருப்ப மொழியிலும் பதவியேற்றனர். பாஜ எம்பி.க்கள் உறுதிமொழியை வாசித்து முடித்ததும், ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ராம்’ என கோஷமிட்டுச் சென்றனர். கூட்டத்தொடரின் 2ம் நாளான நேற்றும் எம்பி.க்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்ந்தது. சட்டீஸ்கர் மாநிலம், ராஜ்நந்கான் தொகுதி பாஜ எம்பி.யான சந்தோஷ் பாண்டே முதல் நபராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி அவரது மாநில மொழியான மராட்டியத்தில் பதவியேற்றார். முதல் முறை எம்.பி.யான பாஜ.வை சேர்ந்த சன்னி தியோல் ஆங்கிலத்தில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.க்களும், அதிமுக.வின் ஒரே எம்பியான ரவீந்திரநாத்தும் தமிழிலிலேயே பதவியேற்றனர். அப்போது, உறுதிமொழியை வாசித்த பிறகு தமிழக எம்பிக்கள் அனைவரும் தாய்மொழிப் பற்றுடன் ‘தமிழ் வாழ்க’ என உரக்க முழக்கமிட்டனர்.  கரூர் தொகுதி திமுக எம்பி ஜோதிமணி ‘வாழ்க தமிழ்; வளர்க தமிழ்நாடு’ என முழக்கமிட்டார். ஈரோடு எம்பி கணேசமூர்த்தி ‘தமிழ்நாடு என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம்’ என்றார். பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் ‘வாழ்க தமிழ்; வாழ்க தமிழ்; வாழ்க தமிழ்’ என 3 முறை முழக்கமிட்டார். மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் ‘தமிழ் வாழ்க; வாழ்க கலைஞர்; வாழ்க பெரியார்’ என்றார். திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் ‘காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் வாழ்க’ என்றார்.

விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ‘வாழ்க தமிழ்; வாழ்க பெரியார்’ என்றார். சிதம்பரம் எம்பி தொல்.திருமாவளவன் ‘வாழ்க அம்பேத்கர், பெரியார், வெல்க ஜனநாயகம், சமத்துவம்’ என்றார். தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘வாழ்க தமிழ், வாழ்க பெரியார்’ என்றார். கோவை மார்க்சிஸ்ட் எம்பி சுப்பராயன் ‘மதச்சார்பின்மை நீடூழி வாழ்க; இந்தியா நீடூழி வாழ்க’ என்றார். கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் ‘ஜெய் ஜவான்; ஜெய் கிசான், பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க’ என்றார். பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் ‘வாழ்க தமிழ்; இந்தியாவும் வாழ்க’ என்றார். இதேபோல் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தமிழக எம்பி.க்களும் தமிழிலேயே பதவியேற்றுக் ெகாண்டனர்.

இத்தகைய முழக்கங்களை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜ எம்பி.க்கள், ஒவ்வொரு முறையும் எதிர்கோஷமிட்டு சலசலப்பை ஏற்படுத்தினர். தமிழக எம்பிக்கள் முழக்கமிட்ட உடனே, ‘பாரத் மாதா கி ஜே’ என்றும், ‘ஜெய் ராம்’ என்றும் அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து மாநில எம்பி.க்களும் அவரவர் பிராந்திய மொழியில் உறுதிமொழி ஏற்றநிலையில், தமிழக எம்பி.க்களுக்கு எதிராக பாஜ.வினர் முழக்கமிட்டது அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்தது.  தொடர்ந்து, ரேபரேலி தொகுதி எம்பி.யாக ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

புதிய எம்பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்றுடன் முடிந்தது. இன்று புதிய சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது.

வரும் 20ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். பின்னர், அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு மறுநாள் 5ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த மாதம் 26ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

‘இன்னொரு முறை சொல்லுங்க’ராகுல் காந்தி கலகலப்பு

நேற்றைய  பதவியேற்பிலும் பாஜ எம்பி.க்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டனர்.  பாஜ எம்பி அருண் குமார் சாகர் 2 முறை ‘பாரத் மாதா கி ஜே’ என கூறினார்.  அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது மைக்கில், ‘‘இன்னொரு முறை  சொல்லுங்க’’ என கேட்டுக் கொண்டார். மீண்டும் அருண் குமார் முழக்கமிட்டர்.  ராகுல் மீண்டும் ‘இன்னொரு முறை’ என கேட்டார். அதற்கும் முழக்கமிட்ட அருண்  குமார், ‘‘எவ்வளவு தடவை வேண்டுமானாலும் முழக்கமிடுகிறேன். ஆனால், ‘ஜே’ என்ற  கடைசி வார்த்தையை ராகுல் சொல்ல வேண்டும்’’ என்றார். அதற்கு ராகுல்  ‘ஜெய்ஹிந்த்’ என கூற, மற்ற காங்கிரஸ் எம்பி.க்களும் கோரசாக ‘ஜெய்ஹிந்த்’ என  முழக்கமிட்டனர்.

தற்காலிக சபாநாயகர் அவதி

ஐதராபாத்  எம்பி அசாசுதீன் ஓவைசி, ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டார். உடனே பாஜ  எம்பி.க்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என எதிர் கோஷமிட்டனர். இதைக் கேட்ட ஓவைசி,  ‘ம்... இன்னும் இன்னும்’ என்பது போல இரு கைகளை அசைத்தபடி நடந்து சென்றார்.  முழக்கங்களால் அவையில் சலசலப்புகள் நீடித்ததால், எம்பி.க்கள் யாரும் எந்த  முழக்கத்தையும் சொல்ல வேண்டாம் என தற்காலிக சபாநாயகர் பலமுறை கேட்டுக்  கொண்டார். ஆனால், அவரது கோரிக்கை வீண் ஆனது. அதை யாரும் சட்டை செய்யவில்லை. ‘‘இந்த முழக்கங்கள் எதுவும், அவை குறிப்பில் பதிவு செய்யப்படாது,’’ என  அவர் கூறினார்.

ஜெய்ஹிந்த் என இந்தியில்முழங்கிய ரவீந்திரநாத்

தேனி தொகுதி அதிமுக எம்பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத், தமிழில் உறுதிமொழியை வாசித்து முடித்ததும், ‘ஜெய்ஹிந்த்’ என்று இந்தியில் முழக்கமிட்டு சென்றார். இதற்கு பாஜ எம்பிக்கள் பலர் மேசையை தட்டி வரவேற்றனர். அதேசமயம், தமிழ் வாழ்க என்று சொல்லி மற்ற தமிழக, பாண்டி எம்பிக்கள் பதவியேற்றபோது, ஆளும் தரப்பில் இருந்து அதற்கு எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது.

எழுந்து சென்ற ராஜ்நாத் சிங்

அவையின் முன் வரிசையில் அமர்ந்து இருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறிது நேரம் தமிழக எம்பி.க்களின் உறுதிமொழியை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் திடீரென அவரது இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டார். தமிழக எம்பி.க்கள் அனைவரின் பதவி பிரமாணம் முடியும் வரை அவரது இருக்கைக்கு ராஜ்நாத் சிங் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: