×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு கோயில் குளத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 5 கிராமங்களில் போராட்டக்குழு அமைப்பு

மன்னார்குடி: கோட்டூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோயில் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 5 கிராமங்களை உள்ளடக்கிய போராட்டக்குழுவும் அமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ காரபன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் 5 ஒன்றியங்களிலும் விவசாயிகள் தன்னெழுச்சியுடன் திரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டூர் ஒன்றியம் 67 பனையூர் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின்  சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு  கைவிட வேண்டும், காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசின் தமிழக விரோத, விவசாயிகள் விரோத போக்கிற்கு மாநில அரசு துணை நிற்க கூடாது, கோட்டூர் ஒன்றியத்தில் ஏற்கனவே போடப்பட்டு இயங்கும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகளை தவிர்த்து புதிதாக எந்த கிராமத்திலும் எண்ணெய் கிணறுகளை அமைக்க கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர் உக்கடை, கமலாபுரம், பனையூர், கீழமருதூர், மேலமருதூர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், விவசாய சங்க நிர்வாகிகள் அடங்கிய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மேலப்பனையூர் திரவுபதி அம்மன் கோயில் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : protest , Farmers protest, protest , hydrocarbon,project
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!