×

அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு: வலையபட்டியில் 11ம் நாளாக நீடிக்கிறது போராட்டம்... சமாதான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு

திருமங்கலம்: வலையபட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர் மேற்கொண்டுள்ள போராட்டம் 11வது நாளாக இன்றும் நீடிக்கிறது. மேலும் இரு தரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வலையபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்திற்கு இதே ஊரைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 2 பெண் ஊழியர்களை, பணியில் அமர்த்தியதை கண்டித்து,  பொதுமக்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். இன்று 11வது நாளாக அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து, வலையபட்டி மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 2 குழந்தைகள் மட்டுமே தற்போது அங்கன்வாடி மையத்திற்கு வருகின்றனர். இந்த மையத்தில் மொத்தம் 20 குழந்தைகள் படிக்கின்றனர்.

இது குறித்து கிராமத்ைத சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘‘கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு, ஜல்லிக்கட்டு போட்டியில் பெரிய அளவில் வெடித்தது. இதனை தொடர்ந்து எங்கள் கிராமத்திலுள்ள கோயில் ஒன்றில் கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டோம். இதனால் எங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப முடியாது. தெய்வ குற்றமாகி விடும். அதே நேரத்தில் அதே சமுதாயத்தை சேர்ந்த வேறு கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு வந்தால் நாங்கள் குழந்தைகளை அனுப்ப தயாராக உள்ளோம். பிரச்னை எங்களுக்கும், உள்ளூர் ஆதிதிராவிட மக்களுக்கும்தான். கிடா வெட்டியதால் உள்ளூரில் அவர்களுடன் ஒன்று இணைய முடியாது. எனவே குழந்தைகளை அனுப்ப முடியாது என முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.இருதரப்பு மோதல் தொடர்பாக கடந்த 10 நாட்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்தில் ஆண்கள் பெரும்பாலானோர் தலைமறைவாக உள்ளனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே உள்ளனர். கிராமம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரச்னை தொடர்பாக நேற்று திருமங்கலத்தில் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள், போலீசார் மட்டுமே வந்திருந்தனர். கிராமத்தை சேர்ந்த இரண்டு தரப்பு மக்களும் பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணித்தனர். இதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

Tags : children ,Anganwadi Center: Struggle ,battlefield ,Peace Talk Negotiation , Anganwadi, child, refusal to send
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...