×

ஒன்றரை மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து இரண்டாவது நாளாக மக்கள் சாலை மறியல் போராட்டம்

அருப்புக்கோட்டை: ஒன்றரை மாதமாக குடிநீர் விநியோகிக்காத அருப்புக்கோட்டை நகராட்சியை கண்டித்து, நேற்று 2வது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. தண்ணீர் கிடைக்காததால் மக்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 8 மற்றும் 11வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி, அருப்புக்கோட்டை - ராமேஸ்வரம் சாலையில், நேற்று முன்தினம் அரை மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே நேற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. நகராட்சியில் உள்ள புளியம்பட்டி திருநகர் பகுதியில் 23, 26, 27 மற்றும் 28வது வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்ைல. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் அருப்புக்கோட்டை - விருதுநகர் சாலையில் நேற்று காலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரி மற்றும் டிராப்ட்ஸ்மேன் சுமதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் ேபச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அருப்புக்கோட்டை 30வது வார்டு, ஆசாரிமார் பெரிய தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் 25 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாலை பழைய பஸ்நிலையம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரி ஆகியோர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்குள் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Road blockade
× RELATED தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி...