திருவண்ணாமலை அருகே அரிசி வாங்குவதற்காக ரேஷன் கடையில் காத்திருந்த மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாப பலி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ரேஷன் கடையில் அரிசி வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி  மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராம ரேஷன் கடையில் 907 ரேஷன் கார்டுகள் உள்ளன. இனாம்காரியந்தல், சின்ன குழவன்குட்டை, பெரிய குழவன்குட்டை, வேடிநகர், அன்னக்கிளி கொட்டாய், மோட்டூர், சத்திரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கடையில் பொருட்கள் பெறுகின்றனர்.இந்நிலையில், அரிசி வாங்குவதற்காக 300க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலையிலேயே ரேஷன் கடை வாசலில் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு விற்பனையாளர் கிருஷ்ணன் கடையை திறந்தார். அப்போது, அவர் நூறு கார்டுகளுக்கு ரசீதுபோட்டு முடித்துவிட்டு, பின் அரிசி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால், முதலில் செல்லும் நபர்களுக்குதான் அரிசி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த கூட்டத்தினரிடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, நெரிசலில் சிக்கிய அதே கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம்(63) என்பவர் மயங்கி கீழே விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடலை பார்த்து கிராம மக்கள் கதறி அழுதனர். 30 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்த  தனபாக்கியத்திற்கு, சவுந்திரராஜன் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் சவுந்திரராஜன் சென்னையில் குடும்பத்துடன் தங்கி தச்சு வேலை செய்து வருகிறார்.இதனால், முதியோர் உதவித்தொகையை நம்பி, இனாம்காரியந்தல் கிராமத்தில் தனபாக்கியம் மட்டும் தனியாக வசித்து வந்தார். முதியோர் உதவித்தொகை பெறுவதால் அவரது அட்டைக்கு 5 கிலோ ரேஷன் அரிசி மட்டும் வழங்கப்படுகிறது. அதுபோதுமானதாக இல்லை என்பதால், அவரது மகனது ரேஷன் கார்டுக்கான அரிசியையும் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

கடந்த மாதமும் முதலில் சென்ற 400 ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே அரிசி கிடைத்திருக்கிறது. எனவே, இந்த மாதம் எப்படியாவது அரிசி பெற்றுவிட வேண்டும் என்ற ஏக்கத்தில், அதிகாலை 3 மணிக்கே ரேஷன் கடை வாசலில் படுத்திருந்த தனபாக்கியம், காலை 7 மணிக்கு வரிசையில் நிற்க தொடங்கியுள்ளார். சுட்டெரித்த வெயில், கூட்ட நெரிசல் மற்றும் பசி மயக்கத்தால் துடிதுடித்து விழுந்து தனபாக்கியம் இறந்துள்ளார். இதற்கிடையே மூதாட்டி பலியானதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மாதத்தில் சில நாட்கள் மட்டுமே இந்த ரேஷன் கடை திறக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த மாதம் நேற்று வரை அரிசி வழங்காமல் தாமதம் செய்ததால்தான், ஒட்டுமொத்த கூட்டமும் சேர்ந்தது. எல்லா நாட்களும் கடையை திறந்து மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அரிசி வழங்கியிருந்தால் இந்த நெரிசல் ஏற்பட்டிருக்காது எனக்கூறி ரேஷன் கடை முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விற்பனையாளர் கிருஷ்ணன், ரேஷன் கடையை அவசர, அவசரமாக மூடிவிட்டு வெளியேறினார். இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் (பொது விநிேயாக திட்டம்) சரவணன், இனாம்காரியந்தல் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

907 ரேஷன் கார்டுகளுக்கு ஒரே கடையா?
500 ரேஷன் கார்டுகளுக்கு அதிகம் இருந்தால், ரேஷன் கடையை இரண்டாக பிரிக்கலாம், 150 கார்டுகள் உள்ள குடியிருப்புகளுக்கு ஒரு பகுதி நேர ரேஷன் கடை திறக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இனாம்காரியந்தல் கிராம ரேஷன் கடையில் 907 கார்டுகள் இருந்தும், இதுவரை பகுதி நேர கடை திறக்கவில்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையை அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. எனவே, அரிசி விநியோகிக்கும் நாட்களில் தொடர்ந்து இதுபோன்ற தள்ளுமுள்ளு ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Tags : Muthootty ,ration shop ,Thiruvannamalai , rice , Thiruvannamalai,crowd, demonstration
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...