×

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாததை கண்டித்து டிபிஐயில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்றுகூறி டிபிஐ வளாகத்தில் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500 பேர் அங்கு கூடியுள்ளதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிறப்பு ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு அரசிதழில் இதற்கான பாடத்திட்டம் மற்றும் அறிவிப்பு ஆணையும் தமிழக அரசு வெளியிட்டது.

பின்னர் 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் இறுதிப் பட்டியல் வெளியாகி 9 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்த நிலையில், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பணி நியமனம் கிடைக்கும் என்று நாங்கள் காத்துக்கிடக்கிறோம். அரசு காலம் கடத்தி வருவதால், பலர் பணி நியமனத்துக்கான தகுதி வயதை கடந்து வருகின்றனர்.

குறிப்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பெண் ஆசிரியர் சாந்தி என்பவர் டிஆர்பி நடத்திய ஓவியத் தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதிப்பட்டியலில் இடம் பெற்று இருந்தார். அவருடைய வயது 57. 12 மாதம் நிறைவுற்றுள்ளது. அதனால் அவர் பணி நியமனம் பெற முடியாமல் ஓய்வு பெற்றுவிட்டார். போட்டித் தேர்வு எழுதி இறுதிப் பட்டியலில் இடம் பெற்றும் பணி நியமனம் கிடைக்கவில்லை. எனவே முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிறப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : DPI , Special teachers blockade, DPI, failing to qualify
× RELATED சென்னை டிபிஐ வளாகத்தில் இனி...