×

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

* புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்
* பிரதமர் மோடி முதலில் உறுதிமொழி ஏற்றார்
* தமிழக உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
புதுடெல்லி: பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில், பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர். நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், எம்பிக்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பமான மொழியில் பதவிப்பிரமாணம் ஏற்றனர். மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்களவை தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்றத்தின் (17வது மக்களவை) முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, வீரேந்திர குமார் தலைமையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது.  முதலில் பாரம்பரிய வழக்கப்படி, அனைத்து உறுப்பினர்களும் ஒருநிமிடம் எழுந்து நின்று மவுனத்தை கடைபிடித்தனர்.இதையடுத்து, புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மக்களவை பொதுச் செயலாளர் சினேகலதா வஸ்தவா, எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்தார். முதலில், பிரதமர் மோடி பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, மத்திய அமைச்சர்கள், பாஜ உறுப்பினர்கள் மேசையை தட்டி ‘மோடி, மோடி’ என்றும், ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் கோஷமிட்டபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியில் பதவியேற்ற பிரதமர் மோடி, தற்காலிக சபாநாயகருக்கும், அனைத்து எம்பிக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அவைத் தலைவர்களான கே.சுரேஷ் (காங்.), பிரிஜ்பூஷன் சரண் சிங் (பிஜேடி), பி.மெதாப் (பாஜ) ஆகியோர் பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எம்பிக்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பமான மற்றும் தாய்மொழியில் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதவியேற்றனர். மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பத் நாயக், அஸ்வினி சவுபே உள்ளிட்டோர் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். முதல் பெண் எம்பியாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பஞ்சாபி மொழியில் பதவி ஏற்றார்.
கேரள எம்பிக்கள் மலையாளத்திலும், அசாம் எம்பிக்கள் அசாமி மொழியிலும், மகாராஷ்டிரா எம்பிக்கள் மராட்டி மொழியிலும், பீகார் எம்பிக்கள் மதுபானி மொழியிலும், ஒடிசா எம்பிக்கள் ஒடியா மொழியிலும், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் கட்சி எம்பிக்கள் தெலுங்கிலும், கர்நாடகா எம்பிக்கள் கன்னடத்திலும் பதவி ஏற்றனர்.

கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்பியான கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆங்கிலத்திலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா காஷ்மீரி மொழியிலும் பதவி ஏற்றனர். பீகாரின் ஜனார்தனன் சிங் சிக்ரிவால் போஜ்பூரி மொழியில் பதவியேற்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழியில் போஜ்பூரி இடம்பெறாததால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.மேற்குவங்க பாஜ எம்பிக்கள் பதவிப்பிரமாணத்துடன் ‘ஜெய் ராம்’ கோஷமிட்டனர். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆத்திரமூட்டும் வகையில் இவ்வாறு அவர்கள் கோஷமிட்டுள்ளனர். இதேபோல, போபால் தொகுதியிலிருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா பதவியேற்ற போதும் சலசலப்பு ஏற்பட்டது. அவர் தனது பெயருடன் அவரது ஆன்மிக குருவின் பெயரையும் சேர்த்து வாசித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 முறை தடை ஏற்பட்டு, 3வது முறையாக சாத்வி பதவிப்பிரமாணத்தை சரியாக வசித்து பதவி ஏற்றார். முடிவில் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த பாஜ எம்பிக்களும் அதேபோல கோஷமிட்டு பதவிப்பிரமாணத்தை முடித்தனர். இதனால் குறுக்கிட்ட தற்காலிக சபாநாயகர், விதிமுறைப்படி பதவிப்பிரமாணத்தை ஏற்க வலியுறுத்தினார்.ஒடிசா மாநில எம்பிக்கள் பதவியேற்றதை தொடர்ந்து, முதல் நாள் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. 2ம் நாளான இன்றும் எம்பிக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர உள்ளது. இதில், தமிழக எம்பிக்கள் பதவி ஏற்க உள்ளனர். முதல் 2 நாள் கூட்டத்தில் வேறெந்த அலுவலும் நடைபெறாது. 19ம் தேதி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் 20ம் தேதி நடக்கும் கூட்டுக்கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றுவார். ஜூலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இக்கூட்டத்தொடர் அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடக்கும்.

தாமதமாக வந்த ராகுல்
கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கிய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவைக்கு வரவில்லை. பிற்பகலுக்கே பிறகே அவர் வந்தார். மாலை 3.30 மணி அளவில் கேரள எம்பிக்கள் பதவியேற்றனர். அப்போது, வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் ஏற்றார். பதவிப்பிரமாணத்தை வாசித்து முடித்ததும், கையெழுத்திட மறந்து இருக்கையை நோக்கி நடந்தார். உடனே அதிகாரிகள் அவரை அழைத்து கையெழுத்திடுமாறு கூறினர். மேலும், விதிமுறைப்படி சபாநாயகர் இருக்கையை சுற்றி செல்லுமாறும் சைகை காட்டினர். ராகுல் பதவியேற்ற போது பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘வயநாடு தொகுதி எம்பி.யாக பதவியேற்றுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளேன்’’ என்று ராகுல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு வார்த்தையும் மதிப்புமிக்கவை’
மக்களவை கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக,  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘நாடாளுமன்றத்தில் நாம் நுழைந்ததும், ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்பதை நாம் மறந்து விட வேண்டும். எந்த பிரச்னையையும் பாரபட்சமின்றி, நாட்டின் நலனை மட்டுமே கருதி சிந்திக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கும், அவர்களின் தீவிர செயல்பாடும் மிக முக்கியமானது. எதிர்க்கட்சிகள் அவர்களின் எண்ணிக்கையை எண்ணி கவலைப்படத் தேவையில்லை. எனவே எதிர்க்கட்சிகள் அவை பங்கேற்பிலும், குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் அழுத்தமாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு மதிப்புமிக்கவை. நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவைக்கு அதிக பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

ஸ்மிருதி இரானிக்கு பலத்த கைத்தட்டல்
மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 55,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலை தோற்கடித்து அசத்தினார். இதனால், கட்சியில் அவருக்கு மரியாதை அதிகரித்துள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் நேற்று ஸ்மிருதி இரானி பதவி ஏற்க அழைக்கப்பட்டார். அவரது பெயர் உச்சரிக்கப்பட்டதும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற அமைச்சர்கள் மேசையை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். உறுப்பினர்களின் கைத்தட்டல்கள் அடங்க நீண்ட நேரமானது. இந்தியில் பதவியேற்றுக் கொண்ட ஸ்மிருதி, தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கும், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பதிலுக்கு சோனியாவும் கைகளை கூப்பி வாழ்த்து தெரிவித்தார்.

Tags : session ,Lok Sabha , first session,17th, Lok Sabha,began
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை