×

20 ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளியிட்ட அறிக்கையை அரசு பின்பற்றி இருந்தால் தண்ணீர் பிரச்சனை இருந்திருக்காது: சகாயம் ஐ.ஏ.எஸ்

காஞ்சிபுரம்: தண்ணீர் பிரச்சினை குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளியிட்ட அறிக்கையை, அரசு பின்பற்றி இருந்தால் சென்னையில் இன்று தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால், மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு வரும் நிலையில், தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கல்குவாரி நீர் நிலைகளை கண்டறிந்தது, சுத்திகரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினார். சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழை நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தேன், ஆனால் அரசு சீர்செய்யவில்லை. எனவே, தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் என்றும், அதனை அரசு செய்யும் என்று நம்புவதாகவும் சகாயம் தெரிவித்தார். இதையடுத்த, மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த சகாயம் ஐ.ஏ.எஸ், மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என்றும், முன்னேறிய பல்வேறு நாடுகளில் தாய்மொழியை தான் தங்களது பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படுவதாகவும் கூறினார்.

Tags : government ,IAEA , Water problem, trilingual policy, helper IAS
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...