×

அட்சய திரிதியை வரும் 10ம் தேதி கொண்டாட்டம் நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியது

* வாடிக்கையாளரை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

* கடந்த ஆண்டை விட 20 முதல் 25% வரை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: அட்சயதிரிதியை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு அட்சய திரிதியை வருகிற 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்கி, மே 11ம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது.

உதயதிதியின் அடிப்படையில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினத்தன்று, காலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாகும். இந்தாண்டு அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் அட்சயதிரிதியை அன்று கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அட்வான்ஸ் புக்கிங்கை தற்போது தொடங்கியுள்ளது.

தாவது, குறைந்தது 10 சதவீதம் முன்பணம் செலுத்தி உங்களுக்கு பிடித்த தங்க நகை அல்லது தங்கத்தின் விலையை பதிவு செய்யுங்கள். விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து பாதுகாப்பை பெறுங்கள். அட்சயதிரிதியை அன்று விலை அதிகரித்திருந்தாலும், நீங்கள் பதிவு செய்த தங்கத்தின் விலைக்கே நகையை வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை விலை குறைந்திருந்தால் தங்கத்தின் விலை ஆதாயங்களை நீங்களே பெறலாம்.

தங்கம் சவரனுக்கு ரூ.1500 தள்ளுபடி, வைரம் காரட்டிற்கு ரூ.10,000 தள்ளுப்படி, வெள்ளி நகைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி.  அது மட்டுமல்லாமல் முன்பதிவு செய்பவர்களுக்கு பல கடைகளில் தங்க நகைகள், நாணயங்களுக்கு செய்கூலி கிடையாது என்று கவர்ச்சிகரமான சலுகைகளை அளித்துள்ளது. தங்க நகை வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே வந்து அழைத்து செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறியுள்ளன.

ஏற்கனவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அட்சய திரிதியை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நிறைய பேர் நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங்கை போட்டி போட்டு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நகைக் கடைகளில் பலவிதமான புதிய டிசைன்கள் வந்துள்ளன. எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்பட பல விதமான நகைகள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் புதிய வடிவமைப்பில் பல்வேறு நகைகள் வந்துள்ளன.

சராசரியாக 3,000 முதல் 4,000 டிசைன்கள் உள்ளன. இவற்றில், 1000க்கும் மேலான புதிய டிசைன்கள் அடங்கும். அட்சய திரிதியை நாளில் நகை வாங்க வருவாரை இந்த புதிய டிசைன் நகைகள் நிச்சயம் கவரும் என்று கூறப்படுகிறது. நகைக்கடைகளில் அட்சய திரிதியை வரவேற்கும் வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். அட்சயதிரிதியை முன்னிட்டு கடைகளை அதிகாலையிலேயே திறக்க உள்ளனர்.

கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நள்ளிரவு வரை கடைகளை திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அட்சயதிரிதியை 2 நாட்கள் நடந்தது. இதில் 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 20 முதல் 25 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

The post அட்சய திரிதியை வரும் 10ம் தேதி கொண்டாட்டம் நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Akshaya Trithi ,Chennai ,Atsayatrithi ,Tamil Nadu ,Akshay Trithi ,
× RELATED அட்சய திரிதியை நகை வாங்க மக்கள் ஆர்வம்: கோவையில் 100 கிலோ தங்கம் விற்பனை