நிர்வாகக்குழுவினர் மிரட்டுவதால் மோதல் கூட்டுறவு செயலர்களை இடமாற்றம் செய்ய முடிவு

சேலம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களை, மாவட்டத்துக்கு 25 பேர் வீதம் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்  செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களுக்கு தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி  வகிக்கின்றனர். இந்நிலையில், தலைவர்கள் சிலர், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியில்லாத சிலருக்கு லட்சக்கணக்கில் கடன் வழங்குமாறு வங்கி செயலாளர்களை வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர் கடன் வழங்குவதற்கு கமிஷன் கேட்பதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தலைவருக்கும் செயலாளருக்கும் இடையே தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. அவர்களின் உத்தரவை ஏற்காமல் இருந்தால், வங்கி செயலாளர்களை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில்,  ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு வகையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் செயலாளர்களை  முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பேரை, அந்தந்த கிரேடு உள்ள கடன் சங்கத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த முடிவை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் வரவேற்கின்றனர்.  அதன்படி, சேலம் மாவட்டத்தில் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில், ஏ,பி,சி கிரேடு உள்ள சங்கத்தில் அதிக பிரச்னை உள்ள சங்கங்களின் பட்டியலை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்த செயலாளர்கள்  இடமாற்றம் செய்யப்படலாம் என ெதரிகிறது.இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக மாவட்டத்துக்கு 25 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆணை கிடைத்ததும் இந்த  நடவடிக்கை உடனே செயல்படுத்தப்படும் என்றனர்.இது தொடர்பாக கூட்டுறவு பணியாளர்கள் கூறும்போது, இப்படி இடமாற்றம் செய்வதால், நிர்வாகக்குழுவிற்கு அடிமை போல் இல்லாமல் சுதந்திரமாக செயல்படமுடியும். செயலாளர்களே கவுன்சிலிங் முறை போல் விரும்பும் இடத்துக்கு  இடமாற்றம் வாங்கிக் கொண்டும் செல்லலாம், என்றனர்.× RELATED தமாகா செயற்குழு கூட்டம்