×

தடை காலம் முடிந்தது: கானாங்கழுத்தை, மயில் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

கடலூர்: தடை காலம் முடிந்து மீன்பிடித்து கரை திரும்பிய கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு கானாங்கழுத்தை மற்றும் மயில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தடை காலம் முடிந்து நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கடலூர் துறைமுக பகுதியில் இருந்து அதிகளவில் படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் நேற்று மதியத்திற்கு பிறகு கரை திரும்பினர். மத்தி மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்ற மீனவர்களுக்கு உயர் ரக மீன் வகையான கானாங் கழுத்தை மற்றும் மயில் மீன்கள் அதிகளவில் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று முதல் மீன்பிடித்தொழில் தொடங்கியதால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்ட கடலூர் துறைமுகம் மீண்டும் சுறுசுறுப்படைந்தது. பிடிபட்ட மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தனர்.கடலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி மீன்பிடி விசைப் படகுகள் இன்று முதல் கரை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வஞ்சிரம், சுறா, கொடுவா, பாறை மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் உள்ளனர். கடலுக்கு சென்று படகுகள் கரை திரும்ப தொடங்கியிருப்பதால் கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளது. விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தொடங்கி விட்டதால், இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து வகையான மீன்களின் விலையும் ஓரளவு குறைய தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


Tags : fishermen , Prohibition period, mackerel, peacock fish, fishermen
× RELATED காரைக்காலில் தடையை மீறி கடலுக்கு...