×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை உச்சத்தை எட்டியது அரசும், அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை பதவியை தக்க வைப்பதில் மட்டுமே குறி

* வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர்  * ஐ.டி. நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடும் அபாயம் * அமைச்சர்கள் வீடுகளுக்கு தாராளமாக தண்ணீர் சப்ளை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழக அரசோ, அமைச்சர்களோ இதை கண்டுகொள்ளவே இல்லை.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. குடிநீர் வழங்கும் ஏரிகளும் அடியோடு வறண்டதால், சென்னையின் குடிநீர்  விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தோ அல்லது பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு சென்றோ  பணியாற்றுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அதேபோன்று, சென்னையை சுற்றியுள்ள ஓட்டல்களுக்கும் தண்ணீர் கிடைக்காததால், இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே ஓட்டலை நடத்த முடியும். அதன்பிறகு ஓட்டலை மூடிவிட முடிவு  செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது.சென்னை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியர்கள் சிலர் கூறியதாவது: சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் 650 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இந்த சாலையில்  உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 60 சதவீதம் தண்ணீர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே வேண்டும். தினமும் 4  ஆயிரம் லாரிகள் தண்ணீர் எடுத்து வந்து விநியோகிக்கின்றன.ஆனால் கடந்த சில நாட்களாக, இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குடிநீருக்கும், அத்தியாவசிய  தேவைகளுக்கும் (கழிவறை) தண்ணீர் இல்லை. அதனால் தினசரி செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தீத்தடுப்பு பணிக்காக தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

எனவே, பல பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன. இல்லாவிட்டால் பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்கு சென்று அங்கிருந்து  பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன. அதன்படி, 20 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் பேரை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன என்றனர்.குடிநீர் பஞ்சம் காரணமாக சென்னையில் உள்ள பல ஓட்டல்கள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை அண்ணாசாலை சந்திப்பில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் தகவல் பலகையில், தண்ணீர் இல்லாத  காரணத்தால் சேவையை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதே நிலைமைதான் சென்னையில் பல ஓட்டல்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, “பல்வேறு ஆதாரங்களில் இருந்து குடிநீரை பெற்று கடும் சிரமத்துக்கிடையே பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதனால், வணிக தேவையை பூர்த்தி செய்ய  வாய்ப்பில்லை” என்றனர்.இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் தண்ணீருக்கு காலி குடத்துடன் தெரு தெருவாக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ, முதல்வரோ, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ இந்த இரண்டு  மாதத்தில் ஒருமுறை கூட தண்ணீர் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களுக்கு நேரடியாக சென்று அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்யவில்லை.

அதிமுக ஆட்சியை தக்க வைக்கவும், மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டும் பலமுறை டெல்லிக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் படையெடுக்கிறார்கள். ஆனால், சொந்த மாநில  மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முதல்வரோ, அமைச்சரோ என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பதே தமிழக மக்களின் ஆதங்கமாக உள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வார நேற்று முன்தினம் தமிழக அரசு ₹500 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இதுபோன்று ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு நீர்நிலைகளை கூட தூர்வாரவில்லை என்று  விவசாயிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் மக்களுக்கா அல்லது நேரடியாக அமைச்சரின் கஜானாவுக்கு செல்லுமா என்பதே விவசாயிகளின் கேள்வியாக  உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காததால் குடும்பத்தில் தகராறு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சென்னையில் உள்ள 30 அமைச்சர்கள் வீடுகளுக்கு தினசரி 2 லாரி தண்ணீர்  தாராளமாக சப்ளை செய்யப்படுகிறது.

இந்த தண்ணீரில் அவர்கள் வீட்டு உபயோகம் மட்டுமல்லாது, காரை கழுவுவது, தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது, மாடுகளை குளிப்பாட்டுவது என தாராளமாக பயன்படுத்துகிறார்கள். அதேபோன்று 200க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் வீடுகளுக்கும் தாளராமாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், குடிநீர் வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடம் ஷவரில் குளிக்காதீர்கள், வாளியில் தண்ணீர் பிடித்து குளிக்கவும், ஷேவ் செய்யும்போது குழாய் தண்ணீரை  பயன்படுத்தாதீர்கள், காரை கழுவாமல் துடையுங்கள் என்று அட்வைஸ் மட்டுமே செய்கிறார்கள். ஆனால் இந்த அட்வைஸ் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கிடையாதா என்பதே மக்களின் கேள்வியாகும்.இதேநிலை நீடித்தால், இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை மற்றும் புறநகர் மக்கள் அனைவரும் ஒரு குடம் தண்ணீருக்காக வீதிக்கு வந்து போராடும் அபாயம் ஏற்படும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதை  கவனத்தில் கொண்டு தமிழக அரசும், முதல்வரும், துறை அமைச்சர் வேலுமணியும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க ஏதாவது ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 30 அமைச்சர்கள் வீடுகளுக்கு தினசரி 2 லாரி தண்ணீர் தாராளமாக சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை அவர்கள் காரை
கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது என தாராளமாக பயன்படுத்துகிறார்கள். 200க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வீடுகளுக்கும் தாராளமாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

Tags : Government ,Minister ,areas ,suburbs ,Chennai , water problem ,minister, retain,post
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...