×

கொடைக்கானலுக்கு வழிகாட்டிய எங்களுக்கே வழியில்லை

* வெள்ளக்கெவி மக்கள் சாலை கேட்டு மனு

கொடைக்கானல் : கொடைக்கானல் வெள்ளக்கெவி மலை கிராமமக்கள் சாலை வசதி கோரி ஜமாபந்தியில் மனு அளித்தனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மனு கொடுத்து வருகின்றனர். கொடைக்கானல் தாலுகாவிற்குட்பட்ட வெள்ளகெவி, அடுக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நேற்று நடந்தது. கலெக்டர் வினய் பங்கேற்று மனுக்களை பெற்று கொண்டார். வெள்ளகெவி மலை கிராமமக்கள் அளித்த மனுவில், ‘வெள்ளகெவியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவ்வூருக்கு கால்நடையாக வனப்பகுதிக்குள் நடந்துதான் செல்ல வேண்டும். அன்றாட தேவைகளை கூட கொடைக்கானல் அல்லது பெரியகுளம் சென்றுதான் பெற முடியும். குறிப்பாக ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் கொடைக்கானல்தான் வர வேண்டியுள்ளது. அவசர கால மருத்துவ தேவைக்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை யாருமே செவி சாய்க்கவில்லை. இனியாவது தாமதிக்காமல் சாலை வசதி செய்து தர வேண்டும்’ ஏன கூறப்பட்டிருந்தது. பெரியகுளத்திலிருந்து வெள்ளக்கெவி வழியாகத்தான் ஆங்கிலேயர்கள் கொடைக்கானலுக்கு வந்தனர். இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன் டோலி கட்டி மேலே அழைத்து சென்றதும் வெள்ளக்கெவி மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சின்னூர் மலை கிராமத்தை சேர்ந்தவர்களும் சாலை வசதி கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

 *கொடைக்கானல் தாலுகாவில் நேற்று முன்தினம் பென்சன் பெற மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மனு அளித்திருந்தனர். இதை பரிசீலித்த சமூகநலத்துறை உடனடியாக அவர்களுக்கு பென்ஷன் வழங்குவதற்காக ஆணையை வழங்க உத்தரவிட்டது. கலெக்டர் வினய் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பென்ஷன் ஆணையை நேற்று வழங்கினார். உடன் கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன், தாசில்தார் வில்சன், சமூகநலத்துறை தாசில்தார் சுப்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : Kodaikanal , Kodaikanal , vellakovi, road facility,collector
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்