×

குப்பை கொட்டி எரிப்பதால் 24 மணி நேரமும் புகையும் கிணறு: மூச்சுத்திணறலால் மக்கள் தவிப்பு

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குப்பை கொட்டி எரிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் கன்னியம்மன் கோயில் தெருவில், பொது கிணறு ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கிணற்றில் இருந்து அப்பகுதி மக்கள்  குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஊராட்சியாக இருந்த இந்த பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின், அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கிணறு தூர்ந்தது.இதை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாழடைந்த நிலையில் உள்ள  இந்த கிணற்றை தற்போது சிலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த குப்பையை மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்து எரிப்பதால், கிணற்றில் இருந்து 24 மணி நேரமும் புகை வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல்  மற்றும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.குறிப்பாக, இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கிணற்றினை பார்வையிட்டு தீயை அணைக்கவும், அதில் உள்ள  குப்பையை அகற்றி, தூர்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : burning garbage,smoke well,suffocation
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...