×

மத்திய அரசு புதிய கல்வி கொள்கைப்படி பாடப்புத்தகங்களில் மதத்தை திணிப்பதை கைவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

நாகை: பாட புத்தகங்களில் மத்திய அரசு மதத்தை திணிப்பதை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ புதிய கல்வி கொள்கையை புகுத்த நினைக்கிறது.  கஸ்தூரிரங்கன் அறிக்கை இந்தி, ஆங்கில மொழியில் உள்ளது. ஏற்கனவே மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகின்றோம். பிளஸ் 2 பாடதிட்டத்திற்கும், நீட் நுழைவு தேர்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பிளஸ் 2  பாடதிட்டத்தில் இடம் பெறுவது இல்லை. கல்வியில் சொந்த கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயக கடமை இல்லை. கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வழங்க வேண்டும்.

மேலும் அது தொடர்பான கருத்துக்களை அனுப்புவதற்கான தேதியை காலநீடிப்பு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஏனெனில் கஸ்தூரி ரங்கன் அறிக்கை, எஸ்சி, எஸ்டி, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உரிமைக்கு எதிராக உள்ளது. மனுதர்மத்தை மீண்டும் புகுத்த மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசுக்கு அஞ்சி நடந்து தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு. தற்பொழுது ரயில் நிலையங்களில் பணிபுரிவோர்கள் இந்தி மொழியில் தான் பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அதுவும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. பாடபுத்தகங்களில் மத்திய அரசு மதத்தை திணிப்பதை கைவிட வேண்டும்.இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : government ,Muthrasan , Central Government, New Education Policy, Muthrasan
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை