×

வலையங்குளம் அங்கன்வாடி பிரச்னை மக்கள் நெருக்கடிக்கு பயந்து ஊழியர்களை மாற்றுவதா?

திருமங்கலம் : ‘மக்கள் நெருக்கடிக்கு பணிந்து ஊழியர்களை இடமாற்றம் செய்வதா? வலையங்குளம் அங்கன்வாடி மைய ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜூலை 17ம் தேதிக்குள் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் சிபாரிசுகளை ஏற்காமல் மதுரை கலெக்டராக பணியாற்றிய நாகராஜ், அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமனம் செய்தார். இதையடுத்து அவர் மதுரையில் இருந்து திடீரென மாற்றப்பட்டார். தற்போது வரை மதுரை மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் நியமிக்கப்படவில்லை. கலெக்டர் நாகராஜால் நியமனம் செய்யப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வலையபட்டியை சேர்ந்த ஜோதிலட்சுமி மற்றும் அன்னலட்சுமி ஆகியோர் கடந்த 4ம் தேதி அதே ஊரில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளராக பொறுப்பேற்றுக் கொண்டனர். இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்தனர். மேலும் மக்கள் திரண்டு திருமங்கலம் பிடிஓவை சந்தித்து தங்களது கிராமத்து அங்கன்வாடி பணியாளர்களை மாற்ற வேண்டும், அதுவரையில் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப மாட்டோம் என கூறியுள்ளனர். இதையடுத்து அதிகாரிகள், ஜோதிலெட்சுமியை மதிப்பனூர் மையத்திலும், அன்னலட்சுமியை கிழவனேரி மையத்திலும் தற்காலிகமாக பணி செய்யுமாறு அனுப்பியுள்ளனர். இது குறித்து ஜோதிலட்சுமி மற்றும் அன்னலட்சுமி கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் எங்களுக்கு பணியாணை கொடுத்து வலையங்குளத்திற்கு அனுப்பி வைத்தார். நாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்பவில்லை. இந்த மையத்தில் 20 குழந்தைகள் உள்ளனர். எங்களை வேறு கிராமங்களுக்கு மாற்றியுள்ளனர். எனினும் சொந்த ஊரிலேயே வேலை பார்க்க விரும்புகிறோம்’ என்றனர்.

இதனிடையே மதுரை மாவட்ட கலெக்டர் (பொ) சாந்தகுமார் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில், ‘மதிப்பனூர், கிழவனூர் கிராமங்களில் கூடுதல் பொறுப்பு பணியில் இருந்து ஜோதிலட்சுமி மற்றும் அன்னலட்சுமி விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வலையங்குளம் அங்கன்வாடியிலேயே சத்துணவு ஊழியர்களாக பணிபுரிய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் வலையங்குளத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்த பிரச்னை தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையின் போது, ‘கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து இரு ஊழியர்களை இடமாற்றம் செய்தது ஏன்? இது மனித உரிமை மீறல் ஆகாதா? இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், ‘இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 17ம் தேதிக்குள் மதுரை கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Anganwadi ,crisis , Anganwadi problem , Web site,troubling people ,afraid of the crisis?
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்