வத்திராயிருப்பு அருகே பயங்கரம் : நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, எதிர்பாராத வகையில் குண்டு வெடித்தில் 2 பேர் காயமடைந்தனர். ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். எதற்காக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தெற்கு கோட்டையூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான தோட்டம் இப்பகுதியில் தரிசு நிலமாக இருக்கிறது. இவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் பயன்பாட்டில் இல்லாத மாட்டுத்தொழுவமும் உள்ளது. இந்நிலையில், இவரது தோட்டத்தில் இருந்து நேற்றிரவு பயங்கர வெடிச்சத்தம் வந்ததாக, அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதன் பேரில் வத்திராயிருப்பு போலீசாருக்கு மாரிமுத்து தகவல் தெரிவித்தார்.

இன்று அதிகாலை போலீசார் மாரிமுத்துவின் தோட்டப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, மாட்டுத்தொழுவம் இருந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பதும், அப்பகுதியில் வெடிமருந்துகள் சிதறிக் கிடந்ததும் தெரிந்தது. ரத்தத் துளிகளும் இருந்ததால், போலீசார் பக்கத்து தோட்டங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது, சுடுகாடு அருகே மற்றொரு தோட்டப் பகுதியில் ஒருவர் படுகாயங்களுடன் கிடந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் தெற்கு கோட்டையூரைச் சேர்ந்த அழகர்சாமி(26) என்பதும், இதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் மக்காளி என்பவருடன் சேர்ந்து மாரிமுத்து தோட்டத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் நாட்டு வெடி குண்டுகளை தயாரிக்கும் முயற்சியில்  ஈடுபட்டதும் தெரிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். குண்டு வெடித்த போது பயங்கர சத்தம் கேட்டதால் யாரும் வந்து விடுவார்கள் என்று அஞ்சி அழகர்சாமி, மக்காளி இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.  இதில் படுகாயங்களுடன் தப்பிச் செல்ல முடியாமல் அழகர்சாமி மயங்கி கீழே விழுந்துள்ளார். காயங்களுடன் தப்பிய மக்காளியை போலீசார் தேடி வருகின்றனர்.

அழகர்சாமியை இன்று அதிகாலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக அவர் சிவகாசி கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவசக்தி, எஸ்ஐ, குமார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிமருந்து மற்றும் தடயங்களை சேகரித்தனர். வன விலங்குகளை வேட்டையாட இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? அல்லது யாரையும் பழி வாங்க தயாரிக்கப்பட்டதா? வெடிகுண்டு தயாரிப்பிற்கான வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன? வெடிகுண்டு தயாரிப்பு கும்பலுக்கும், தோட்டத்தின் உரிமையாளர் மாரிமுத்துவிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணைை நடத்தி வருகின்றனர். 


Tags : Terror ,house , Terror , house ,2 bomb blast
× RELATED பெரும்பாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரி வெட்டி கொலை