×

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு துவக்கம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் கடந்த 2015ல் ஆய்வு தொடங்கப்பட்டது. இதுவரை 4 கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ளன. மக்களவை தேர்தல் காரணமாக, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நிலத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது. ஆனால் அறிவித்தபடி அமை்சசர் வராததால் அன்று அகழாய்வு பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில் நேற்று ஐந்தாம் கட்ட பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கீழடியில் முதல் மூன்று அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டது. அதில் 7,618 பொருட்களை கார்பன் ஆய்வு, ஒளி ஆய்வு முடித்து தமிழக தொல்லியல்துறையிடம் ஒப்படைத்து விட்டது. நான்காம் கட்ட ஆய்வு தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் உறைகிணறு, மான் கொம்பில் செய்த மணிகள், யானை தந்தத்தில் செய்த தாயக்கட்டை, இரும்பினால் ஆன உபகரணங்கள், தங்கத்திலாலான சிறு மணிகள் உட்பட 5,820 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்த 13,638 தொல்லியல் பொருட்களும் கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

ஐந்தாம் கட்ட ஆய்வானது பூமிக்கு அடியில் உள்ள கட்டுமானங்களை,  புவியீர்ப்பு மின்காந்த அலை மூலம் ஸ்கேன் செய்வதைப்போல ஆய்வு செய்ய உள்ளோம். இந்த ஆய்வு தமிழகத்தில் நடப்பது இதுவே முதன்முறையாகும்’’ என்றார். நிகழ்ச்சியில் கதர் துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குநர் சிவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஐந்து கிராமங்களில் ஆய்வு மண்டலங்கள்:
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘கீழடியைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களை வரலாற்று ஆய்வு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். ஒரு சிறு பகுதியில் மட்டுமே ஆய்வு நடத்தப்படுகிறது. திமுக கூட்டணி நாடாளுமன்றத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதற்கு கீழடி அகழாய்வை மத்திய அரசு முடக்க நினைத்தது தான் முக்கிய காரணம்’’ என்றார்.

Tags : phase , Bottom, 5th stage, excavation, beginning
× RELATED 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான...