×

தி.நகரை தொடர்ந்து ஆயிரம்விளக்கு கடையில் கைவரிசை: ரூ1 லட்சம் மதிப்பிலான புடவை திருட்டு

சென்னை: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் நேற்று முன்தினம் 4 பெண்கள் உட்பட 6 பேர், திருமணத்திற்கு ஆடை வாங்குவது போல் நடித்து, விலை உயர்ந்த 4 பட்டுப்புடவைகளை திருட முயன்றனர். அவர்களை கடை ஊழியர்கள் பிடித்து பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு நேற்று வந்த 4 பெண்கள் உட்பட 5 பேர், துணி வாங்குவது போல் நடித்து ரூ1 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகளை அபேஸ் செய்து சென்றனர். புகாரின் பேரில், ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (24) என்பவரிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்த போரூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23), சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

* பம்மல், மூங்கில் ஏரி, முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்து செல்லும் 19 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கிருஷ்ணனை நேற்று பொதுமக்கள் அடித்து உதைத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

* அம்பத்தூர், ராமாபுரம், கண்ணையா தெருவை சேர்ந்த சின்னஅரசு மகள் தேஜாஸ்ரீ (9). ஊத்துக்கோட்டையில் உள்ள சிறுவர் காப்பகத்தில் தங்கி, 3ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி விடுமுறையில் வீட்டுக்கு வந்தாள். நேற்று முன்தினம் அவளுக்கு பெற்றோர் ஜூஸ் வாங்கி கொடுத்தபோது வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளி இறந்தாள். இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் அஜித்குமார் (23). திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி, புதுமுக நடிகர் சங்க தலைவருக்கு ஜிம்பாயாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், திருவல்லிக்கேணி அப்துல் கரீம் குறுக்குத் தெருவை சேர்ந்த ரிஸ்வான் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பாக, அஜீத்குமார் கத்தியை காட்டி ரிஸ்வானை மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : T.Nagar ,shop chairperson , Thousand lamp, sari thief
× RELATED போக்குவரத்து போலீஸ் நடவடிக்கையால்...