×

அடுத்த தேர்தலில் என்னை எதிர்க்கப் போவது யார்? வெளிநாடுகள் தகவல் கொடுத்தால் ஏற்பேன்: டிரம்ப் பேச்சால் பரபரப்பு

வாஷிங்டன்: ‘‘அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் எதிர்தரப்பு வேட்பாளர்களைப் பற்றி வெளிநாடுகள் தகவல்கள் தந்தால், அதை தாராளமாக அவற்றை ஏற்றுக் கொள்வேன்’’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யாவின் உதவியை நாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. எதிர்க்கட்சி வேட்பாளரான ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன. இது குறித்து, ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு 2 ஆண்டுகள் விசாரணை நடத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், ‘அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்துள்ளது. ஆனால், டிரம்ப் கிரிமினல் சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ என கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதுதொடர்பாக, ஏபிசி செய்தி சேனல் அதிபர் டிரம்ப்பிடம் பேட்டி எடுத்தது. அப்போது, ‘‘வரும் தேர்தலில் ரஷ்யா அல்லது சீனா போன்ற அந்நிய நாடுகள் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பற்றி ஏதேனும் தகவல் அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?’’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, டிரம்ப், ‘‘அதை ஏற்பதில் எந்த தவறும் இல்லையே. அமெரிக்க அரசியல் வேட்பாளர்கள் அந்நிய சக்திகளின் உதவியை பெறுவதில் தவறு இருப்பதாக கருதவில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட தகவல் வந்தால் அதை தாராளமாக ஏற்பேன். இது தேர்தலில் தலையீடு அல்ல,’’ என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

வெளிநாடுகளின் தகவலை ஏற்பதாக டிரம்ப் அளித்துள்ள பேட்டிக்கு, அமெரிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பெய்டன் தனது டிவிட்டர் பதிவில், ‘இது அரசியல் அல்ல. நாட்டின் பாதுகாப்புக்கே தீங்கு விளைவிப்பதாகும். ஜனநாயகத்தை ஒடுக்க நினைப்பவர்களிடம் இருந்து அமெரிக்க அதிபர் ஒருபோதும் எந்த உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது,’ என்றார்.

Tags : election ,overseas , Election, trump, sensation
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...