×

கோபி அருகே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்

கோபி: கோபி அருகே விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தடையை மீறி பணியை தடுக்க சென்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ராசிபாளையத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பாலவாடி வரை 190 கி.மீ. தூரத்திற்கு 400 கிலோ வாட் திறன் கொண்ட 564 உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த இரு ஆண்டுக்கு முன் துவங்கியது. இதில், 524 மின்கோபுரங்கள் அமைக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 11 மின்கோபுரங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 29 மின்கோபுரங்களும் என மொத்தம் 40 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி மட்டுமே நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று கோபி அருகே வளையகாரனூரில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி முனுசாமி தலைமையில் அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கிய பிறகே பணியை துவங்க வேண்டும். அதுவரை பணியை நிறுத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாத நிலையில், மின்கோபுரம் அமைப்பதற்காக குழி எடுக்கும் பணியில் இருந்த பொக்லைன் இயந்திரங்களை தடுப்பதற்காக தடையை மீறி விவசாயிகள் சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், விவசாயிகளை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: பள்ளிபாளையம் ஒன்றியம் காடச்சநல்லூர் ஊராட்சி ஐந்துபனையில், உயர்மின்  கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  விவசாயிகள், தங்களின் ஆடு, மாடுகளுடன் வந்து, இலைகளை ஆடையாக  கட்டிக்கொண்டு, கைகளில் கருப்பு கொடி ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். இது குறித்து கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  படைவீடு பெருமாள் கூறுகையில், ‘கருமத்தம்பட்டி,  சூலூர் பகுதியில் உயர்மின் கோபுரத்திற்கான அளவீடு செய்ய வந்த  அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை, காவல்துறை மூலம் அரசு  கைது செய்து அச்சுறுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளை அச்சுறுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

Tags : Anti-farmers ,mining area ,Kobe , Gopi, minikapuram, peasant fight
× RELATED கோபியில் தங்கமயில் ஜூவல்லரி புதிய முகவரிக்கு இடமாற்றம்