×

தொண்டர்கள் படுகொலையை கண்டித்து பாஜ நடத்திய கண்டன பேரணியில் வன்முறை: போலீஸ் தாக்குதலில் பலர் காயம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜ.வினர் நடத்திய பேரணியில் தொண்டர்கள், போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜ 18 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, அங்கு தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையில் 8 பாஜ தொண்டர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க பாஜ தலைவர் திலிப் கோஷ், மூத்த தலைவர்கள் கைலாஷ் விஜய் வர்கியா, முகுல் ராய் தலைமையில், வெற்றி பெற்ற 18 பாஜ எம்பி.க்கள், தொண்டர்கள் கொல்கத்தாவில் நேற்று பேரணியாக சென்றனர்.

அப்போது. போவ் பஜார் பகுதியை கடக்கும் போது பாஜ தொண்டர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தொண்டர்களை விரட்டி அடித்தனர். அதற்கு  பதிலடியாக பாஜ தொண்டர்களும் போலீசாரை நோக்கி கற்கள், பாட்டில்களை வீசினர். இந்த மோதலில் ஏராளமான பாஜ தொண்டர்கள் காயமடைந்தனர்.முன்னதாக, பாஜ தலைவர் முகுல் ராய் கூறுகையில், ``வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த வன்முறையில் 3 பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து தேசிய புலானய்வு  அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு முதல்வர் மம்தாவே பொறுப்பு,’’ என்றார். இதற்கிடையே, தனது அரசை கவிழ்க்கவே திட்டமிட்டு தவறான வதந்தியை பரப்பி வருகிறது என்று பாஜ.வை மம்தா கடுமையாக சாடியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம் கவர்னர் அழைப்பு
மக்களவை தேர்தலைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகளுக்குள் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியாக மாநில கவர்னர் கே.என். திரிபாதி, ராஜ்பவனில்  இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : protest rally ,assassination ,volunteers ,police attack , Volunteers,Bhajan, Many injured , police ,attack
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்