×

பழநி அருகே ஆயக்குடியில் இலவச வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு கண்டித்து ஆதிதிராவிடர்கள் போராட்டம்

பழநி: பழநி அருகே ஆயக்குடியில் இலவச வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆதிதிராவிடர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பெரும்பாறை காலனியில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 300 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 300 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுமனை ஒதுக்கீட்டில் ஆளுங்கட்சியினர் பாரபட்சம் காட்டுவதாகவும், லஞ்சம் கேட்பதாகவும் கூறி நேற்று 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி கூறியதாவது, வீட்டு மனை ஒதுக்கீடு நியாயமான முறையில் நடைபெறவில்லை. ஆளுங்கட்சியினர் 1 பட்டாவிற்கு ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் கேட்கின்றனர். தர மறுப்பவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது என்கின்றனர். தகுதியில்லாதவர்கள் மற்றும் வசதியானவர்களுக்குக் கூட வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எங்கள் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ முறையீடு

வீட்டு மனை ஒதுக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து நேற்று பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் வினய்யை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். பெரும்பாறை காலனி மக்களின் தேவைகள் குறித்தும், இலவச வீட்டுமனை தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதி அளித்தார்.

Tags : Adi Dravidar ,protest ,Ayakudi Free House Residence ,Palani , Palani, free housing
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...