×

ரூ.75 லட்சத்துக்கு வாங்கப்பட்ட 60 குப்பை வாகனங்கள் பழுது

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகாரமாகும் குப்பைகளை அகற்ற பயன்படுத்தபட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் பழுதடைந்துள்ளது.  திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட 60 வார்டுகளில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வரி விதிப்பு கட்டடங்கள் உள்ளன. வீட்டு வரி, தொழில் வரி, வணிக நிறுவனங்களுக்கான வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், வணிக வளாக கடை வாடகை என பல்வேறு வரி இனங்களின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தினமும் 540 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சிப்பகுதிகளிலுள்ள 60 வார்டுகளை நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கு 4 உதவி ஆணையாளர்கள் தலைமையில் பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வீதிகள் குறுகலாக உள்ளது. இதனால், குப்பை லாரிகள் சென்று வர முடியாத நிலை உள்ளது. அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி கடந்த 2 ஆண்டுக்கு முன் ரூ.75 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட 60 எலக்ட்ரிக் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் கொள்முதல் செய்து, அதில் குப்பைகளை சேகரித்து வந்தனர். பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் பயன்படுத்திய சில மாதங்களிலேயே பழுதடைந்து விட்டது. ஒரு வாகனத்தின் விலை ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பில் வாங்கிய 60 வாகனங்கள் பழுதாகியுள்ளது. இதை சரி செய்து மீண்டும் பயன்படுத்தாமல் குப்பையோடு குப்பையாக நிறுத்தியுள்ளனர். ஏழை, எளிய மக்கள் கஷ்டப்பட்டு வரியாக செலுத்திய பணம் லட்சக்கணக்கில் வீணாகி வருகிறது.

மேலும் பழைய வாகனங்களில் உள்ள பழுதுகளை நீக்கி பயன்படுத்தாமல் தற்போது ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக 40 எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அவை அவிநாசி ரோடு ரேவதி மருத்துவமனை அருகே உள்ள தண்ணீர் டேங்க் வளாகத்தில் நிறுத்திவைத்துள்ளனர். எனவே பழுதடைந்த பேட்டரி வாகனங்களை சரி செய்து மீண்டும் குப்பை எடுக்க பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Garbage, vehicles, repair
× RELATED 101.3 டிகிரி பதிவு; நெல்லையில் மீண்டும் வெப்பம் அதிகரிப்பு