×

சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை... கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி திருவாரூர் தொழிலாளர் நலத்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன்படி திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய இந்த பேரணியை கலெக்டர் ஆனந்த் துவக்கி வைத்து பேசியதாவது, குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவது குற்றமாகும். மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த சட்ட விதிகளை மீறும் நிறுவனம் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ரூ 20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ 50 ஆயிரம் வரையில் அபராதம் அல்லது 6 மாதம் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டு வரையில் சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். எனவே மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் குறித்து கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் சைல்டு லைன் தொலைபேசி எண் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். முன்னதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி குறித்து பெயர்ப்பலகையில் கலெக்டர் ஆனந்த் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு நீதிபதி கோவிந்தராஜன், ஆர்டிஓ முருகதாஸ், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், தாசில்தார் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : companies ,children ,Collector , Thiruvarur, children, labor
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...