×

விளாத்திகுளத்தில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு... வைப்பாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் மக்கள்

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் தொடரும் வறட்சியால் 2 கிமீ நடந்து சென்று வைப்பாற்றில் ஊற்றுத் தோண்டி குடிநீர் எடுக்கும் பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 12 ஆயிரம் வாக்காளர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். விளாத்திகுளம் பேரூராட்சியில் குடிநீர் பிரச்னை காரணமாக 15 வார்டை சேர்ந்தவர்களுக்கும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தாமதம் இருப்பதால் விளாத்தி குளம் வைப்பாற்று கரையோரம் உள்ள அடிபம்பிற்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த அடிபம்பில் நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் பெற்றுச் சென்றனர். இதனால் இந்த அடிபம்பு அடிக்கடி பழுதாகி வருகிறது. இதேபோன்று தூத்துக்குடி சாலை அருகே பேரூராட்சி சார்பில் குடிநீர் பம்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். எனினும் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் பயன்படுத்தி ஏராளமான போலியான தனியார் குடிநீர் நிறுவனங்கள் வயல்பகுதியின் கரையோரம் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றன. விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு குடம் குடிநீர் 10 முதல் 12 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு நாள் ஒன்றுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூபாய் 35 வரை செலவு செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.

இந்நிலையில் விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள் வைப்பாற்றில் சுமார் 8 அடி ஆழ ஊற்று தோண்டி குடிநீர் எடுத்து வருகின்றனர். இதற்காக வைப்பாற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் சுமார் இரண்டு கிமீ வரையில் நடந்து சென்று ஊற்றில் பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள் கூறுகையில்: விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தனியார் வாகனங்களில் கொண்டு விற்கப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூபாய் 10 முதல் 12 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

தினக்கூலியாக வேலை செய்யும் ஏழை பொதுமக்கள் தங்கள் தினசரி ஊதியத்தில் பாதி பணத்தை குடிநீருக்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் விளாத்திகுளம் வைப்பாற்றில் ஊற்று தோண்டி பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் எடுத்து வருகிறோம். வைப்பாற்றில் ஒரே ஒரு ஊற்று மட்டும் இருப்பதால் குடிநீர் எடுத்துச் செல்வதற்கு மிகவும் தாமதமாகிறது. மேலும் ஊற்று அடிக்கடி கலங்கி விடுவதால் ஒரு குடம் குடிநீர் எடுப்பதற்கு சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது விளாத்திகுளம் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் பெண்கள் தீராத வெயிலில் குடிநீருக்காக காத்திருக்கின்றனர். வைப்பாற்றில் முட்செடிகள் அதிகமாக இருப்பதால் பெண்கள் குடிநீர் குடங்களை சுமந்து கொண்டு நெடுந்தூரம் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் எதுவும் இல்லாததால் பெண்கள் அச்சத்துடனே ஊற்றில் குடிநீர் எடுக்க சென்று வருகின்றனர். எனவெ வைப்பாற்றில் கூடுதலான ஊற்றுகள் அமைத்துத் தரவேண்டும். மேலும் பேரூராட்சி சார்பில் விளாத்திகுளம் வைப்பாற்றில் போர்வெல் அமைத்து குடிநீர் எடுத்து விளாத்திகுளத்தில் முக்கிய பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்கில் குடிநீர் தேக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Vilattikulam, drinking water
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடிகர்...