×

மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு வாதாட நளினியை ஆஜர்படுத்த என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தனது மகள் திருமண ஏற்பாட்டுக்காக பரோல் கேட்டு நேரில் ஆஜராகி வாதிடுவதற்காக நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல், திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் நளினி தாக்கல் செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளது என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் அவரது மகள் திருமண ஏற்பாடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினர். மேலும், அரசு தரப்பு வக்கீலைப் பார்த்து, நேரில் ஆஜராக வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை மறுக்க முடியாது. அவரை நேரில் ஆஜர்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளது?. இதுகுறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என்று கருத்து தெரிவித்து விசாரணையை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Nalini ,government ,High Court ,Tamil Nadu , Daughter's marriage, parole listening, advocate, trouble, trouble?
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...