×

மேடவாக்கம் ஊராட்சியின் குப்பை கிடங்கில் தீவிபத்து : மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

வேளச்சேரி:மேடவாக்கம் ஊராட்சியில் தினசரி 10 டன் குப்பையை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து, மேடவாக்கம் உழவர் சந்தைக்கு பின்புறமுள்ள கல்லுக்குட்டை பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதி குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. இங்கு, மலை போல் குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அடிக்கடி சமூக விரோதிகள் தீவைத்து எரிப்பதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை ஒரகடத்தில் உள்ள குப்பை  கிடங்கிற்கு மாற்ற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, மேடவாக்கத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரகடம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அந்த கிடங்கில் சமீப காலமாக குப்பை எரிக்கப்படும்  பிரச்னை காரணமாக, கடந்த ஒரு மாதமாக குப்பை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது. ஆனால் தண்ணீர் ஏற்பாடு செய்தால்தான் தீயணைப்பு வாகனம் வரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.   

பின்னர் மேடவாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை பரவவிடாமல் அணைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் குப்பை கிடங்கை சுற்றி புகை மூட்டம் பரவியதால்  சுற்றுப்பகுதி மக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வேளச்சேரி மெயின் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், புகை மூட்டத்தால் அவதிப்பட்டனர். அடிக்கடி குப்பைகளை எரிப்பதால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குப்பைகள் எரிப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.


Tags : Madavakkam Panchayat , Madavakkam Panchayat's ,garbage, warehouse fire,people suffer from stroke
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...