×

மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது மந்த கதியில் மலைச்சாலை பணிகள்: குளிக்க வழியின்றி சுற்றுலா பயணிகள் திண்டாட்டம்

அம்பை: தென் மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் நேற்று தண்ணீர் கொட்டியது. இருப்பினும் மலைச்சாலை பணிகள் மந்தகதியில் நடப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல்  திண்டாடுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக மணிமுத்தாறும் பாபநாசமும் விளங்குகிறது. ஆண்டு முழுவதும் கொட்டும் அருவிகள் இங்கிருப்பதால் சுற்றுலா பயணிகள் இடையே மணிமுத்தாறுக்கு  கூடுதல் மவுசு உண்டு. மணிமுத்தாறு அணையும் அதனை சார்ந்த பசுமையும் குளிர்ந்த காற்றும் மனதிற்கும் உடலுக்கும் இதமாக விளங்குவதால் மணிமுத்தாறுக்கு கோடைகாலங்களில் ஏராளமானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில்  வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மாஞ்சோலை வனப்பகுதிகளில் கடந்த மாதம் நிலவிய வறட்சியால் மணிமுத்தாறு அருவியும் தண்ணீரின்றி வறண்டது.

சில தினங்கள் பெயரளவுக்கு தீர்த்தம் தெளித்தாற்போல் தண்ணீர் விழுந்தது. கேரளாவில் தென்மேற்கு  பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது தண்ணீர் வரத்து காணப்படுகிறது. மாஞ்சோலை மலை பிரதேச பகுதியில் குடிநீரின்றி சிரமப்பட்டு வந்த தோட்டத்தொழிலாளர்கள் இப்போதைய பருவ மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வறண்டு கிடந்த மரம் செடிகள் அங்கு துளிர் விட தொடங்கியுள்ளன.மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மாஞ்சோலை ஆறு, முத்தலாறு, குசவன்குழி ஆறு வழியாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.  மணிமுத்தாறு அருவியும், அதை சுற்றியுள்ள சூழலும் தற்போது ரம்மியமாக காணப்படுகிறது.
இருப்பினும் அதை பார்த்து ரசிக்கவோ குளிக்கவோ முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

வனத்துறை மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் மலைச்சாலையில் தார் விரிக்காது தயக்கம் காட்டி வருவது சுற்றுலா பயணிகளுக்கு  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அம்பை வனச்சரகத்திற்குட்பட்ட மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் மலைச்சாலையில் ரூ.1.8 கோடி செலவில் 6.6 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கின. 3மீ அகலம், 10 செமீ உயரத்திற்கு பெட் மிக்ஸ் போட்டு தார் சாலை அமைக்க ஜல்லி விரித்து விரைவாக நடந்து வந்த பணிகள், தார் வைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த சில நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தார் விரிக்க  தாமதப்படுத்துவதால் இதுவரை நடந்த பணிகள் மழையால் சேதம் அடையும் நிலையும் உள்ளது. எனவே காலம் கடத்தாது சாலை பணியை விரைவில் முடித்து, மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா  பயணிகள் விரும்புகின்றனர்.

Tags : Manimuththaru ,mountain slums ,hills ,slums , Manimutharu Falls, Water, Mountain Works, Tourists
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...